ஏய்!
முணு முணுக்கும் வாய்களே!
கொஞ்சம் நிறுத்துங்கள்.

படலைக்கு உள்ளே
தெருநாய் வருவதால்
உன் முற்றம் தொலையுதென்று
எவன் சொன்னான்?

தெருக்கள் எங்கும் நீ
கை வீசி நடக்கணும்.

உன் இருப்பை எப்போதும்
உறுதி செய்யணும்.
உண்மைதான்

உருப்படியாய்
என்ன செய்தாய் இதற்கு?

ஊருக்கு சொல்ல
உன்னிடம் நிறைய உண்டாயினும்
உன்னிடம் சொல்ல
ஏதேனும் உண்டாவென
உன் மனச்சாட்சியைக் கேள்

ஆமெனில்..

நீ கரைவதை தொடர்
ஆயினும்
சில வார்த்தைகளைத் தவிர்
அதைப் பின் காலம் சொல்லும்

இல்லையெனில்..

இனியாவது
சிந்தனைகொள்

மானிடப் பேரவலம் கண்டாவது
உன் மனக்கதவு திறக்கட்டும்

இரும்புச் சிறையுடைத்து
புது மனிதனாய் வெளியே வா!
விடுதலை பற்றி
அப்போது கதைப்போம்

நசிக்கப்பட்ட குரல்வளைகளே
உரிமைக் குரலை
உரத்தொலிக்கும் போது

சில திறந்த குரல்கள் மட்டும்
ஏனிங்கு மௌனித்து கிடக்கின்றன

தெருக்கள் களவு போகும் போதும்
நல்ல உறக்கம் எப்படி உனக்கு வருகிறது

வெறும் கொள்ளி வைக்க மட்டும் தானா
அன்னை பெற்றாள் நம்மை

அன்னை மண் காப்பதை
பிள்ளையன்றி யார் செய்வார்?
அடுத்தவன் வருவானோ சொல்?

நம்பிக்கைச் சிறகு நமக்கிருந்தால் தானே
சிகரத்தை நோக்கி உயரப் பறக்க முடியும்

கூரை ஏறவே சிறகு வலித்தால்
வானாய் விரிந்த சுதந்திரத்தை
எப்படி உன்னால் அனுபவிக்க முடியும்

அண்ணனை நெஞ்சில் எண்ணிடும் நெஞ்சங்கள்
அஞ்சி வாழுதல் முறையோ சொல்லுங்கள்

மண்ணினில் ஆயிரம் மறவரை விதைத்த நாம்
பகையிடம் மண்டியிட்டுப் போவோமா சொல்லுங்கள்

எங்கள் தம்பிகள் தங்கைகள் செய்திடும் போருக்கு
உரமாய் இருக்க எதையோ செய்யுங்கள்

ஆயிரம் போரினில் நாங்கள் தோற்றாலும்
இலட்சியப் போரினில் வெல்வதுதான் நம் இலக்கு

விடுதலைத் தீயது அணையாது

நெஞ்சு நிமிர்த்தி நில்லுங்கள்
வாழ்வா சாவா வரட்டும் பார்ப்போம்


தமிழா!
இது விடுதலைப் பயணம்
வேறு வழியின்றிப் போனதால்
தெரிந்து தான் குதித்தோம்

ஏதிரியை எதிர்ப்பதும்
அவன் தரும் வலியினைச் சுமப்பதும்
இறுதியில் வெற்றி பெறுவதும்
நாங்களாய் தான் இருக்கணும்

இதை விதியென்று சொல்லாதே
இது தான் வாழ்வென்று சொல்லிடவே
எங்கள் வரலாறு விரும்புகிறது.

துயரம் இமயமாய் உயர்ந்தாலும்
விடுதலைப் பறவைகளுக்கு
எப்போதும்
வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான்

நம்பிக்கை கொண்டு நடவுங்கள்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள் உமதாகட்டும்
நாளைய பொழுது நமதாகும்

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net