“வணக்கம்”

அங்கிருந்தொருவன்
அருகிருப்பதுபோல் பேசுவான்

தொலை தூர வாழ்வில்
அதிகாலைப்பொழுதில்
தினந்தோறும் வருவான்.
தாய்நாட்டு வாசனை
தன் குரலாலே தெளிப்பான்.

முன்னைய நாட்களில்..
தனித்தேசக் கனவை
தன்மான உணர்வை
செயல் திறன் ஆற்றலை
எங்களுக்குள்
இன்னும் அதிகமாக்கியவன்

இறுதி நாட்களில்..
முள்ளி வாய்க்கால்
இப்போது என்ன சொல்லுதென்று
வரி விடாமல் சொல்லுவான்

நீர்க்குமிழி வாழ்வுக்குள்ளிருந்தபடி
நிமிர்ந்து வந்து
குரல் தருவான்.

எங்களைப்போல்
முகம் தெரியா நண்பர்கள்
அவனுக்கு அதிகம்.
அத்தனை பேரும்
தேடுகின்றோம் அவனை.

இப்போது
நீண்ட நாட்களாய்
காணவில்லை.
அவனை?
அவன் குரலை?

இன்று..
அருகிருப்பவன்
சொன்னான்
அவன் வீர மரணமென்று

படம் கிடைத்தது.
முதன் முதலாய்
முகம் பார்த்தோம்.

முகத்தோடு முகம் புதைத்து
அழுதோம்
இனம் புரியா உணர்வால்
தவித்தோம்

அவன் செய்தி படித்தோம்
“அழுகை நிறுத்துங்கள்”
அதில் ஒன்று.

“எழுந்து நடவுங்கள்”
இன்னொன்று.

விழுப்புண்ணாய் இருக்கையிலே
வெளி வேலை செய்வாயாம்
ஆறிய மறுகணமே
களம் நோக்கி
நடப்பாயாம்.
புல்லரித்துப்போகின்றோம்

உன்னைத் தொட்டபடி
நடந்தது வரம்.
தொலைத்துவிட்டுத்
தவிப்பது சாபம்.

நாங்கள் பதில் போடவும்
எங்கள் முகம் காணவும்
நீயில்லை
எங்கள் முகந்தெரியாத நண்பனே!

இப்போது
புடம் போடுகின்றோம்,
நீ சொன்னதுபோல்
விடுதலைக்காய்
எங்களை...!



சூரியத் தீயை
நீர் கொண்டு அணையுங்கள்

வானைச் சுருக்கி
கைகளில் அடக்குங்கள்

புயலைப் பிடித்து
சிறையில் அடையுங்கள்

கடலை அள்ளி
நிலவில் நிறையுங்கள்

சுட்டு விரலில் வைத்து
பூமியைச் சுற்றுங்கள்

இத்தனையும் முடித்த பின்
தமிழனிடம் வாருங்கள்

அவன் விடுதலை நெருப்பை
அணைக்க முயலுங்கள்

அப்போதும் தோற்கும்
உங்களின் அடக்குமுறை

விடுதலை நெருப்பில்
விரல் வைத்து வெந்தவர்களே!

எங்களின் தேசத்தில்
முகமூடி போட்டு
முகம் வைத்தவர்களே!
கேளுங்கள்..

மாவீரர் தேசம்
எதையும் இழக்கும்.
மானத்திற்காக..

மானத் தமிழர்
தங்களையே துறப்பர்.
ஈழத்திற்காக..

காலமும்
களங்களும்
உங்களுக்குப்
பதில் சொல்லும்.

தமிழும்
ஈழமும்
நிச்சயம் வெல்லும்.

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net