ஓ!
என் உறவுகளே!
ஒரு மரத்துப் பறவைகளே!

ஏக்கமே வாழ்வாய்
வானமே கூரையாய்

ஆன திசை முழுதும்
தணல் அள்ளி எரித்து நிற்க

கால நதி வெள்ளத்தில்
கரை ஒதுங்கிய சருகுகளாய்

நேற்றிருந்த வாழ்வு தொலைத்து
நீண்டு நெடிய பயணத்தில்
நிர்க்கதி நிலையில்
கானகத்தின் வாசல்களில் இருந்தபடி

உள்ளிருந்து உங்கள் குரல்
உலகின் திசைகளை நோக்கி

என்ன பாவம் நீர் செய்தீர்
வழமை போல்
யாரிற்குமே கேட்கவில்லை
இம்முறையும்

இரத்தோட்டம் மட்டும் இருந்தால் போதாது
சற்று ஈரம் நொதித்தால் தான்
அது இதயம்

நாம் வாழ்வதோ
இதயங்கள் அரிதான உலகத்தில்

பகுத்தறிவு செத்தவனை
மனிதன் என்று எவன் சொல்வான்

நாம் வாழ்வதோ
மிருகங்கள் நிறைந்த பூமியில்

ஈகை இருந்தால் தான் அது மனிதம்
இல்லையெனில்
அது
நடக்கும் நடக்கும் என்று
நாளைக்கடத்தும்
நடக்கும் பிணம்


நாம் வாழ்வதோ
பிணங்கள் நிறைந்த யுகத்தில்


உறவுகளே!
அம்மா உள்ளே பசித்திருக்க
வெளியே அன்னதானம் கொடுக்கும்
இதயம் படைத்தவன் நானல்ல

என் அன்னை மண் வாசம்
அதுவுமல்ல

என்னை அப்படி
என் அன்னை வளர்க்கவும் இல்லை

மன்னித்து விடுங்கள்
உறவுகளே!

இன்றிரவு
சிலதுளி கண்ணீர் மட்டுமே
உங்களிற்காக என்னிடம்..

நாளைய பொழுது விடியட்டும்
என் வியர்வை சொட்டும்
வெள்ளிப் பணம் சேர்த்து
உங்கள் வாசல் சேர
நான் உழைப்பேன்

அதுவரை
உங்களுடன் நான்

உண்ணாமல் உறங்காமல்
உள்ளத்தில்
உறவினை சுமந்தபடி

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net