கண்டியிலிருந்து
யாழ் செல்லும் சாலையில்
“தமிழீழம் வரவேற்கிறது”
இப்போது அகற்றப்பட்டிருக்கலாம்.

கிளிநொச்சி மத்தியில்
இப்போது புலிக்கொடி
பட்டொலிவீசிப் பறக்காதிருக்கலாம்.

ஆனால்
கடந்து செல்லும்
ஓவ்வொரு பிடி மண்ணிலும்
எங்கள் சகோதரரின்
செங்குருதி தோய்ந்திருக்கிறது.

எங்கோ தொலைவில்
எங்கள் காதுகளுக்கு கேட்காதபடி
முனகல் ஒலிகள்
இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.

பெருமூச்சும் கண்ணீரும்
இன்னமும் ஓய்ந்துவிடவில்லை

அடிமைக்குறி எம் முதுகில் ஆழப்பொறிப்பது பற்றியே
சிங்களம் சிந்திக்கிறது.
மகுடங்களின் மாயையில் மக்களை ஏமாற்றும்
முயற்சியில் மட்டுமே
எங்களில் சில மந்தி(ரி)கள்

ஓற்றை வரியிலோ
மேடைப்பேச்சிலோ
கடந்த தசாப்தங்களை
அப்படியே தின்றுவிட்டுப் போவதற்கு
யாரையும் கடந்த தடவை
மந்திரி ஆக்கவில்லை
மறக்கவேண்டாம்.

மலர் மாலைகளை
யாரும் யாருக்கும் எப்போதும் அணியலாம்.
ஒருபோதும்
உறைவாளுக்கு ஓய்வென்றுவிட்டு
துருப்பிடிக்க வைத்துவிடக்கூடாது.

என் இனிய பனை மரங்களே!
சதியால் துடிதுடிக்கும் ஈழக்கனவுகளை
உயிர்ப்பிக்க
இப்போது நம்கையில்
வாக்குச் சீட்டு!

கவனம்!
இருப்பிருக்கும் சத்தையெல்லாம்
தன் பாட்டில்
சவட்டிக் குடிக்கும்
“காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்

உங்களையும்
தங்களைப் போல்
வளைந்து போகும் படி பணிக்கும்
உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்
புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்

எங்கள் தந்தையும் அண்ணனும்
நட்டு வைத்த பனைமரங்களே!
மறவாதீர்!
எப்போதும் எதுவரினும்
நிமிர்ந்து நிற்றலே
எங்கள் அடையாளம்

உங்கள் அருகிருக்கும்
உறவுகட்கும் சொல்லுங்கள்
வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் அப்பால்
வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால்
வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு
நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம்.

6 Your Comments:

 1. பரஞ்சோதி Said

  அருமையான உணர்ச்சிப்பூர்வமான கவிதை தோழரே!

  கட்டாயம் பனைமரங்கள் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும், அடிமை போல் வாழாமல் பனைமரம் போல் நிமிர்ந்து வாழுங்கள் என்ற பாடத்தை போதித்து கொண்டே இருக்கும்.

 1. Gowrybalan Said
  """கவனம்!
  இருப்பிருக்கும் சத்தையெல்லாம்
  தன் பாட்டில்
  சவட்டிக் குடிக்கும்
  “காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்

  உங்களையும்
  தங்களைப் போல்
  வளைந்து போகும் படி பணிக்கும்
  உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்
  புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்"""


  நிதர்சனமான வரிகள் இந்தக் குருவிச்சைகள் இருக்கும்வரை எம்மரத்தயும் செழிக்க விடமாட்டார்கள்


  பாராட்டுடன்...அன்பின்

  பாலன்

 1. jayashankar Said,

  என் இனிய தமிழ் மக்களே என்பது போன்ற தலைப்பிருந்தாலும்,

  தமிழ் பேசிய ஒரே காரணத்திற்காக ரணகளமாக்கப்பட்ட இடங்களை குறித்த வரிகளாகட்டும்.

  ஓட்டு எனும் ஆயுதம் உண்டு என்று தெரிந்தும் அதனை அரசியலாக்கி மக்களை வெதும்பி திரிய வைத்த அவலமாகட்டும்.


  இவ்வளவு நடந்தும், இனியும் நடந்தாலும் அதை கண்டு அசராமல் இருக்க கூடிய மனோ திடத்தை பனை மரத்துடன் ஒப்பிட்டு படைத்த கவிதை அருமை.

  ஹும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

  ம‌ன‌தை நெகிழ‌ வைத்த‌ க‌விதை.

  வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் பாராட்டுக‌ள் ர‌வி இந்திர‌ரே...

 1. அரிகை கா.சேக் பஷீர் Said


  பனைமரம் போல் தலைநிமிர்ந்து நில்லுங்கள்!

  நம்பிக்கையின் புதிய அடையாளம். வளர்க!

 1. Abdul khadar Said

  மானஞ் செறிந்த பண்டாரக வன்னியனின் வீர வரலாற்றை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியதற்கு நன்றி.! வரலாறு நெடுகிலும் காக்கை வன்னியன் போன்ற அடிவருடிகள் இருக்கவே செய்கிறார்கள்.என்ன செய்ய?

  ஒரு ஈழ மைந்தனை சந்திக்க நேர்ந்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது!

 1. மிகவும் உணர்ச்சியுடன் எழுதியுள்ளீர்கள்..

  நிச்சயமாக தமிழ்ர்கள் பனைமரம் போல வாழ்வார்கள்

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net