விடிகாலை விடியாத
அதிகாலைப் பொழுதொன்றில்

அந்த நெட்டூரம் நிகழ்ந்தேற
நெடுந்தூரம் நடந்தோம்.

நெடு நாளாய் வாழ்ந்திருந்த
ஊர் பிரிந்தோம்.

இது நாளாய் நாம் வாழ்ந்த
வாழ்விழந்தோம்.

கால்கள் போனதிசையில்
காடு மேடெல்லாம்
நாம் நடந்தோம்.

மேனி சோர்ந்து
வீழும் நிலையில்
இன்னுமொரு ஊர் சேர்ந்தோம்.

வெயிலுக்கு நிழல் தந்த
வாகை மரமொன்று
எங்கள் வீடானது.

தொண்டு நிறுவனம்
கொண்டு தந்ததில்
ஒரு குடிசை செய்தோம்.

இழந்த நாட்களின் இனிமையை
நெஞ்சுக்குள் பொத்தியபடி

வாழும் நாட்களின் வலிகள்
விழிகளில் நிறைந்து
உவர் நீராய் வழிந்தபடி

போர்க் கோலத்தில்
புதிதாய் ஒரு வாழ்வு
வேம்பின் சாறாய் கசக்கிறது.

காட்டு முற்றம்
எங்கள் வீட்டின் அறையானது.

ஓட்டைக் குடிசையினூடு
கொட்டும் மழை
முற்றும் உள்ளே நுழைந்து
வருகிறது.

எங்கள் வீட்டு வாசலில்
சோகம் வெள்ளம் போடுகிறது.

வெறும் சோற்றுக் கோப்பையை
கண்ணீர் தாரை தாரையாய்
நிறைக்கிறது.

வெற்று வயிறு வேக
நினைவு நெருப்பாய் எரிந்தபடி
செத்துப் போகும் நிலையில்
இப்போது நாங்கள்

என்றபடி
ஒன்று இரண்டல்ல
ஓராயிரம் குரல்கள்
உள்ளிருந்து ஒலித்தபடி

தினம் துயர் எடுத்து நுகரும் வாழ்வு
உயிர் விலை எடுத்தபடி
நகரும் நாட்கள்

ஒரு துளி பருகவாவது
அவன் தாய் முலை சுரக்க
அங்கேதும் இல்லாமல்
ஒரு குழந்தை

ஒரு பிடி அரிசி போட்டாவது
உலையேற்றும் ஆசை
அவன் உயிர் பிரியும் வரை
நிறை வேறாது போக
கதறும் அதன் தாய்

இப்படி ஒன்று இரண்டல்ல
பல நூறு கதைகள்

இது தான் வாழ்வெனில்
எது நாள் வரை சுமப்பது
நம் உறவுகள்?

இன்னும் எத்தனை
சின்ன விழிகளை
நாம் இழப்பது?

அவன் சுடு குழல் கொண்டும்
பொருள் தடை கொண்டும் வதைத்திட
நாம் சும்மா பார்த்துக் கிடப்பதா?

உலகெல்லாம் உணவுகொடுப்போர்
அங்கே உண்ண ஏதும் தராமலே
போகின்றார் பாருங்கள் வெளியே

வெறும் தண்ணீர் மட்டும் மென்று
சாவைத் தவிர்க்க முடியலையே!

சோகம் சொல்லி அழுதிட
இனிக் கண்ணீர் கூட
அங்கு இல்லையே!

உறவென்று சொல்ல
உரிமையுடன் கேட்க
நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்

உறவுகளே!
பல கடைசி மூச்சுக்கள்
இன்னும் இருப்பது
உங்களை மட்டும் நம்பியே
வாழ்வளிக்கும் தெய்வங்களே!
வரமாய் போடுங்கள்
உயிர் காக்க..!

நாளொரு பொழுதாய்
நடைமுறை உலகை
நானும் அவளும்
காணப் புறப்பட்டோம்.
நல்ல நண்பர்களாய்…

ஒரு நாள்…

நிலவை ரசிக்க நினைத்தோம்.
ஆனால்..
இரவுவரை தனித்திருக்கும்
தைரியம் நமக்கிருக்கவில்லை.

நிலவு வரும் வரை நாமிருக்க
நம் கலாச்சார கண்களும்
நம்மை விட்டுவைக்கவில்லை.

இன்னொரு நாள்…

கடற்கரை சென்று
காலாற நடந்து
காற்று வாங்க நினைத்தோம்.

ஆனால்…
நம் கைகளைக் கோர்த்தபடி
காலடி பதித்து
அலை நுரை ரசிக்க முடியவில்லை.

அவள் தடுமாறி
அலைக்குள் விழுந்த போதும்
என்னால் அவளை
அணைக்க முடியவில்லை.
கடலோ அவளை நனைத்துப் போனது.

மூழ்கப் போனவளை
மீட்டு வந்தது கண்டும்
எங்களுக்குள் ஊடல் என்று
ஊர் சொன்னது.

அலை கூட அப்போது
நுரை நுரையாய் சிரித்தது.
காற்றும் ஏதோ
கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.

மழை நாளொன்றில்..
ஒரு குடைக்குள் எங்களால்
நிற்க முடியவில்லை.

நட்பு நனையாதிருக்க
எங்களில் ஒருவர்
மழையில்
நனைய வேண்டியதாயிற்று.

அப்போதெல்லாம்
நட்பு அழுதது.
ஊரோ
துளித்துளியாய் சிரித்தது.

எத்தனையை சுமந்து
நட்பைக் காத்த போதும்

அவன் வாசல்ப் படி வரைக்குமே
என்னால் பயணிக்க முடிகிறது
நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி

நட்சத்திரங்களை எண்ணியபோது
அருந்ததி வெள்ளி காட்டுவதாய்
சொன்னார்கள்

அவள் காலில்
முள் எடுத்த போது
மெட்டி மாட்டுவதாய்
சொன்னார்;கள்.

இத்தனைக்குப் பின்னும்
எங்கள் நட்பு
செத்துப் போகவில்லை.
உள்ளமும் கெட்டுப் போகவில்லை.

ஆனால்
எனக்கு
மணமகள் பார்த்த போதும்
அவளுக்கு
மணமகன் பார்த்த போதும்

சில வாய்கள் சொன்னதை
எங்கள் செவிகள் கேட்டபோது
ஆறாம் அறிவு
கொஞ்சம் சிந்தித்தது

நட்பை ஏற்காத உலகில்
என்றும் நண்பர்களாய்
வாழ நினைத்ததால்..

அவளுக்கு
இப்போது வாய்க்கட்டு
எனக்கு
இப்போது கால்க்கட்டு
நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது
எனக்கும் அவளுக்கும் இடையில்
எப்போதும்....

சோலைத் தென்றலாய்
வீசிப் போகின்றாய்

சுகந்தம் தருவதாய்
சுற்றி வருகின்றாய்

காலைப் பனியாய்
சில்லிட வைக்கின்றாய்

தூறல் மழையாய்
என்னை நனைக்கின்றாய்

மாலை நிலவாய்
மனதை நிறைக்கின்றாய்

மழலை மொழியாய்
தமிழை நனைக்கின்றாய்

மனதுக்கு நிறைவாய்
மணமேடை வருகின்றாய்

மாங்கல்யம் நான் சூட
மனையாள் ஆகின்றாய்

கணவா என்றெனைக்
கட்டி அணைக்கின்றாய்

சேலைக் குழந்தையாய்
என்மடி தவழ்கின்றாய்

என் பாலை நிலத்தில்
பயிர் வளர்க்கின்றாய்

காலை விடியுமுன்
கண் விழிக்கின்றாய்

என் வீட்டு முற்றத்தில்
கோலம் போடுகின்றாய்

விடிகாலை விடிந்ததும்
தேனீர் தருகின்றாய்

நான் கண்விழிக்கையில்
எங்கு செல்கின்றாய்?ரம்பை ஊர்வசி
சொல்லத்தான் கேட்டேன்.
மேனகை உன்னை
கண்களால் காண்கிறேன்.

இந்திரலோகம் இறங்கி வந்து
இங்குற்றாயா பெண்ணே!

இல்லை
இந்திரலோகம் மிஞ்சிடும் பெண்ணாய்
இங்குதான் பிறந்தாயா
கண்ணே!

எங்கு தான் வாழ்ந்தாய்?
இத்தனை நாளாய்..

ஏங்குதே நெஞ்சம்
நாளொரு பொழுதாய்..

நிலை மீறி ஆடும் கண்கள்
நிஜமாக இல்லை
உன்னை விஞ்ச வேறு பெண்கள்

உன்னைக் கண்கொள்ளக் காணத
கண்ணென்ன கண்ணோ!

நீ நெஞ்சள்ளிப் போகாத
நெஞ்சங்கள் உண்டோ?

உன் கன்னக்குழி அழகில்
காணாமல் போகாதார் உண்டோ?

உன் சின்னச் சிரிப்புச் சிறையில்
சிக்கிச் சிறைப்படாதார் உண்டோ?

இல்லையென்று சொல்கின்ற இடையில்
வேறு பெண்ணே இல்லை!

இனி யாரும் பிறந்தால்
அது நம் பிள்ளை!

வெண்ணிலவின் தங்கை என்று
உன்னை நான் அழைக்கவா?

உன்னைத் தொட்டுத்தொடரும் சொந்தம்
நான் என்று சொல்லி வைக்கவா?


ஐந்தொழில் புரியும்
வல்லமை கொண்டவளே!

உன் அங்கங்கள் கொண்டு
அத்தனையும் விளக்கி
ஆடி முடி!

இங்கு
ஆடிக்கொண்டிருப்பவர்கள்
அத்தனைபேரும் அடங்கும் வரை..

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net