போதி மர நிழலிலெல்லாம்
பீரங்கிகள்

இப்போது
புத்தமதத் தத்தவமே
யுத்தம் ஒன்று தான்

செத்து வீழும் பிஞ்சு கூட
யுத்தம் செய்யும் புலியாம்

இதற்கு
வல்லரசுகள் வழங்கிவரும்
“சற்றலைற்று” சாட்சியாம்

கோல மயில் அழகான குல வாழ்வு
பாதி உயிரோடு
வீதி வழி நடக்கிறது.

எமன் ஏவி விடும் கணையாலே
மீதி உயிர்போக
உடல்
தெருவோரம் சிதறிக் கிடக்கிறது.

ஒவ்வொரு தமிழன் திண்ணையிலும்
மரணம் வாழை இலை போட்டு
விருந்து வைக்கிறது.

அதை நன்றாய் சுவைக்கிறது
நவீன உலகம்.
அதில் முழுதாய் தொலைகிறது
மனித நேயம்


தமிழா!
அவர்களின் முடிவு இதுவென்றால்
எங்களின் ஆரம்பம்
இதுவாய் இருக்கட்டும்

எட்டுத்திக்கும் எழுந்து நடப்போம்
மனக்கதவுகள் தினம் தட்டுவோம்.

செத்துவிழும் தமிழரெல்லாம்
பீனிக்ஸ் பறவையாய்
இருப்போம்

மிச்சமுள்ள தமிழரெல்லாம்
உச்சம் தொடும் உணர்வுகள்
சுமப்போம்

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதும்
அச்சமில்லாத் தமிழா!

அச்சமில்லை
அச்சமில்லை
உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
அர்ப்பணிக்கும் தமிழனுக்கு
என்றுமே அச்சமில்லை.

இலட்சிய வீரன் எப்படித் தோற்பான்?
சத்திய வேள்வி எப்படி அணையும்?

மழைக்காலம் ஆனாலும்
மந்திகளே கொப்பிழக்கப் பாய்வதில்லை.
போர்க்குணத்துப் புலிகளுக்கு
இந்தச் சவால் புதிதில்லை.


மானமது பெரிதென்ற
மண்டியிடா வாழ்வெமது.

போகும் உயிர் போனாலும்
புறம் காட்டி ஓடமாட்டோம்

வரிவேங்கைச் சேனை நாங்கள்
ஒரு போதும் வீழமாட்டோம்.

நம்புங்கள்
புலிகள் நகங்களை நறுக்குவதில்லை.
தமிழீழம்
துப்பாக்கிகளை வைத்து பூப்பறிப்பதில்லை.
நாளை
புலிகள் பாயும்.
பிறக்கும்
பொழுதுகள் நமதாக
வரலாறு நிமிரும்.

செய்வதை செய்யுங்கள்
கொடுப்பதை கொடுங்கள்

கொண்டுபோய் கொட்டுவதை கொட்டட்டும்
எங்கள் நிலம் எதையும் சுமக்கும்
எமை எதிர்ப்போர் எவரையும் எதிர்க்கும்
அங்கிருந்துதான் எங்கள் வரலாறு நிமிரும்
அதை நாளை வரலாறு எழுதும்

தமிழா!
நினைவிருக்கட்டும்
தமிழீழம்
ஓர் இனத்தின் விடுதலை மட்டுமல்ல
ஓர் உலகின் விடுதலை
தொடர்ந்து போராடு.

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net