பச்சைக் குழந்தை அங்கே
பாலுக்கு அழுதிருக்க
பாற்குட அபிசேகம் நீயிங்கு செய்தால்
என்னைக் கடவுளென்று
மனிதன் வணங்குவானோ சொல்?

சத்தியமாய்
அந்தக் கல்லுக்குள்ளே
நான் இல்லையெடா!

மானிடா!
நான் கருணையுள்ளவன்.
ஏழை நெஞ்சுக்குள் தான்
எப்போதும் இருப்பேனடா!

உன் இரத்த உறவுக்கங்கே
பாதி உயிர் போகையிலே
எப்படி நான் கொலுவிருப்பேன்?
நீயமைத்த மஞ்சத்திலே!

எப்போதடா நான் கேட்டேன்?
இப்போது நீ எனக்கென்று
செய்வதெல்லாம்..

வானமே கூரையாய் உன் உறவு
வாழ்வுக்கு வரமிருக்க
கோபுரக் கோயில் கட்டி
என்னை குடியிருக்க நீ கேட்டால்
எப்படி இருப்பேனடா சொல்?

அப்படி நான் இருந்தால்
மனிதன் வணங்கும் தெய்வம்
எனும் தகுதி
எனக்கிருக்குமோ சொல்?

மானிடா!
நான் கடவுள் எனும் பெயரில்
அந்தக் குடிலில்
குடியிருக்க வேண்டுமடா!
என் கடமை செய்து
கண்ணயர வேண்டுமடா!

உன்னைக் கும்பிட்டுக் கேட்கின்றேன்.
கோடியில் கோயில் கட்டி
அழைத்தென்னைப்
பழிகாரன் ஆக்காதே!
நீயும் பெரும் பாவம் செய்யாதே!


சத்தியமாய் சொல்கின்றேன்
இப்போது
அங்குவர என்னால் முடியாது.

உள்ளம் கோயில் என்றும்
அன்பே தெய்வமென்றும்
எத்தனை முறையடா சொல்வது!

இனி எப்படியெடா?
உனக்கு உரைப்பது
என் பொருளை..

ஏதோ
என்னைத் தேடி வருவதாய்
சொல்லி
தூரவே போகின்றாய்.

வேண்டுதல் என்றெண்ணி
வீண் விரயம் செய்கின்றாய்.

எனக்கு விழா என்று
உனக்கே விழா எடுக்கின்றாய்.

எனக்கு படைப்பதாய் சொல்லி
நீயே தின்கின்றாய்.

ஏழை பசியிருக்க
ஏப்பம் விடுகின்றாய்.

பெயருக்கும் புகழுக்கும்
பெரும் பணம் இறைத்துப் பின்
கொலரை எடுத்துவிடும்
நீயெல்லாம்…?

எப்படி இருக்கலாம்
என் பக்தனாய்?

எப்படி நான் உண்பேன்
உன் பாவச் சோற்றை

யாருக்கு நான் உரைப்பேன்
உன் ஈனச் செயலை

உண்மையில்
நான் உண்டு உறங்கி
ரொம்ப நாளச்சு
அந்த ஏழைகளைப்போல்..

தயவு செய்து
என் நிலையை நீ
கொஞ்சம் புரிந்து கொள்
மானிடா!

நான் கண்ணீர் வடிப்பதை
இனியாவது கண்டுகொள்
மானிடா!

எப்படி எப்படியோ என்னை வைத்து
பிழையாய் நீ பிழைக்க
என்ன பாவம் நான் செய்தேன்
அணு அணுவாய் நான் இறக்க
அந்த ஏழைகளைப்போல்

மானிடா!
ஓன்று மட்டும் கேள்
நிச்சயமாக
நீ திருந்தும் போது
நீயின்று வேண்டும் வடிவில்
நான் இருக்க மாட்டேன்.

ஒன்றில் இறந்திருப்பேன்
இல்லை
அன்பென்ற வடிவில் உறைந்திருப்பேன்.

தயவு செய்து முயற்சி செய்
என்னை முழுதாய்க் கொல்ல
அல்லது
அன்பென்ற வடிவில்
என்னை எப்போதும் காண

அது வரை
நான் ஏதும் தவறுரைத்தால்
என்னை மன்னித்து விடு
இல்லை தண்டித்து விடு
வழமை போல

இப்படிக்கு
உண்மையுடன்
உங்கள் கடவுள்
அன்பே தெய்வம்

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net