ஏய் மழையே!
உன்னால் தான் உருவானேன்.
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்.
மறந்து விடதே!

என்னைப் பிரிந்திட
எப்படித் துணிந்தாய்?

என்னைப் பிரிகையில்
என்ன நீ நினைந்தாய்?

வானத்தின் மீது
உனக்கென்ன மோகம்?

மேகமாய் அலைவதில்
யாருக்கு லாபம்?

முகவரி தொலைக்கவா
முகிலாகிப் போனாய்?

என்னைப் பிரிகையில்
உன்னை நீ தொலைத்தாய்.

மண்ணை ரசிக்கவா
விண்ணில் மிதந்தாய்?

சில மனிதரைப் பார்த்தா
கண்ணீர் வடித்தாய்?

இல்லை
அவர் மனங்களை அறிந்தா
மரணிக்க நினைத்தாய்?

தற்கொலை
செய்யவா தரைமீது
விழுந்தாய்?

ஒன்று மட்டும் கேள்!

உன்னை ஏந்த பூமியிருக்கும் வரை
வற்றாக் குளங்களாய் வரலாறு மாறும் வரை
வயல்கள் வரம்புகளாய் மாறும்வரை
வறட்சி என்பது தொலையும் வரை
மரங்கள் சுவாசிக்க மறுக்கும் வரை
மலர்கள் மொட்டாகவே மடியும் வரை
அன்பு மனங்களே இல்லாது போகும் வரை

ஏன்
நதிகள் என்னைத் தொட்டுக்கொண்டிருக்கும் வரை
கானல் நீரிலும் ஈரம் காணும்வரை

இப்படி ஆயிரம்
மாறா மாற்றங்கள் நிகழும் வரை

நீ நினைத்தாலும்
உன்னால் மரணிக்க முடியாது.

தரையில் மோதி தலையை சிதைத்தாலும்
தவறுதலாய் கூட நீ சாகமாட்டாய்!

இது
மனிதர்களுக்கு கிடைக்காத வரமா?
இல்லை
நீ பெற்ற சாபமா?
எனக்கது புரியவில்லை

இருப்பினும்
உன் பிரிவு தற்காலிகம்
என்பதை மட்டும்
என்னால் உணரமுடிகிறது.

இருந்தும் ஏங்குகிறேன்
உன் பிரிவிற்காகவல்ல

நீ
என் மீது பொழியாது
அந்த மண் மீது பொழிந்த
முத்தங்களிற்காக

உவர்ப்பாய் இருக்கும் எனக்கு மட்டுமே
உன் முத்தத்தின்
இனிப்பு தித்திக்கும்.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net