undefined
undefined

துளியாய் சேர்ந்த
கடலில் பிறந்த
மழைத்துளி நான்.
இன்று
மேகமாய் அலைகின்றேன்
வானத்தின் வெளிகளில்
மண்ணில் வீழ்வதே
என் இலட்சியம்
மலரே
உன்னைக் காண முன்பு!
இன்று
உன்னில் விழவே
ஏங்குகின்றேன்.
மலரே
உன்னைக் கண்ட பின்பு
பூவே
என்னை
ஏந்திக் கொள்வாயா?
புன்னகை பூத்திருக்கும்
உன் இதழ்களில்…
|
undefined
undefined

தங்கம் தடவிய அங்கமடி
உயிர் தளும்பி வழியும் கவிதையடி
உன் அங்கம் அழகிய சிற்பமடி
என் தூக்கம் எங்கும்
உன் சொப்பணமே
இரவை பகலாய் தந்தவளே
என் இதயம் சலவை செய்தவளே
என் உள்ளம் என்னும் பள்ளத்தில்
நான் ஊற்றிக்கொண்ட உயர் மதுவே
தேடல் என்பதை தொடங்க முன்பே
ஓடி வந்து நுழைந்தவளே
கோடி மின்னல் பார்வைகளால்
பல சேதி சொன்ன பெண்மகளே
வட்டம் போட்ட கோட்டுக்குள்
இனியும் வாழ்ந்து தேய்ந்திட
முடியாது.
சுற்றம்
என்ன சொன்னாலும்
என் கால்கள் நடக்கும்
உன்னை நோக்கி
ஊரே கூடி எதிர்த்தாலும்
உன்னை சேரும் என் கரங்கள்
காலன் எதிரே வந்தாலும்
என் பயணம் தொடரும்
உன் திசையில்
|
undefined
undefined

அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!
நானொரு குழந்தை
நீயொரு குழந்தை
நாமொரு குடும்பம்
நமக்கொரு உலகம்
வாழ்வொரு பூந்தோட்டம்
தினம் தினம் கொண்டாட்டம்
நம் உறவுக்குப் பெயரில்லை
உள் அன்புக்கும் குறைவில்லை
என்பதாய் கடந்தன.
அன்றைய நாட்கள்..
எங்களுக்கு இறக்கை முளைக்க முன்பே
காலம் இறக்கை கட்டிப் பறந்தது.
மேகம் சிந்தும் துளிகளில் ஒன்றாய்
நானும்
இன்னொன்றாய்
நீயும்
எங்கெங்கோ சிதறிவிட்டோம்.
பருவங்கள் மாற
துருவங்கள் உருக
பகல்களும் இரவுகளும்
கடந்தோடிப் போக
இன்று
நீ ஒரு குமரி
நான் ஒரு குமரன்
உன் சின்ன வயதில்
நீ தந்த முத்தங்கள்
இன்று ஏனோ இனிக்கின்றன.
உன் சின்ன விழிப்பார்வை
இன்றும் மின்னல் வெட்டுகின்றது
நீ கெஞ்சும் மொழி கேட்க
என் நெஞ்சு ஏனோ துடிக்கின்றது
உன் வெட்கப் பூட்டும்
விளையாட்டு கோபமும்
வேண்டி நிற்கின்றேன்.
பெண் நால்வகைக் குணத்தை
உன் உருவில் காணத்துடிக்கின்றேன்.
உன் பிஞ்சு மன அன்பு
இன்னும் இருந்து என்னை ஏதோ செய்ய
உன்னில் ஏதோ எனக்குத் தோன்றி
உள்ளிருந்தபடி என்னைக் கொல்ல..
சகானாவின் உயரங்களில்
சகாராவின் வெளிகளில்
பனிக் காடுகளில்
பசுமைத் தேசங்களில்
என
என் தேடலும் தொடர்கிறது
தேசங்களும்
எல்லைகள் கடந்து
நீண்டு செல்கின்றன
நம் அன்பைப் போல்
அன்பே! ஆருயிரே!
நீ இப்போ எங்கே?
என்னுயிரே!
|
undefined
undefined

பூவையென் முகத்தில்
காலத்தின் கீறல்கள்
வலியைத்தந்தன.
ஏனெனில்..
வாழ்வொரு
போராட்டம்.
அதில் தினம்
பல போர்க்களம்.
புலர்கின்ற பொழுதொன்றில்..
காலமே வந்து
புதிதொன்றைத்
தந்திட..,
என்னுள்
ஏனோ?
புயலடிக்கின்றது.
எண்ணத்தில் எல்லாம்
மின்குமிழ் சிரிக்கின்றது.
ஆன திசை முழுதும்
மணி அடிக்கின்றது.
இது எனக்குப் புதிது!
அய்யகோ!
என் செய்வேன் நான்?
இது இன்னொரு போர்க்களமா?
இங்கும் காண்பது போர்முனையா?
இதயம் திறந்து
இழையோடிய வார்த்தைகளை..
என் உள்ளம் குழைத்து
உயிரூட்டிய காகிதத்தை..
மின்னஞ்சல் செய்யாமல்
உன்னிடம் தருகின்றேன்.
வெள்ளைப்புறாவே!
இங்கே வா!
சில மனிதர் செய்வது போல்
இது
அரட்டைக்காதல் அல்ல.
இது
இதயம் கொடுத்து
இதயம் வாங்கும்
உண்மைக்காதல்.
காற்று வெளி நுழைந்து
வானவெளி கடந்து
காத தூரம் சென்று
எனக்கொரு அஞ்சல் செய்!
என் வாழ்வெனும்
பயணம் தொடர
அல்லது
வாழ்வுடன் போர் புரிய.
|
undefined
undefined

வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!
வல்லவனே வாழ்வான்
வரலாறு சொல்கிறது.
வெல்பவனே வாழ்வான்
வெளிப்படை உண்மை.
கொல்வோம் என்றொரு போர்க்குணம் கொண்டு
எல்லையில் நிற்கிறது சிங்களம் இன்று
வெல்வோம் நாமென வேங்கைகள் கூட்டம்
பகை வென்றே காக்கிறார் எங்களின் தேசம்
தர்மம் என்றொரு அடிப்படை உண்டு
தமிழனின் பக்கம் எப்போதும் உண்டு
வெற்றி என்றொறு மந்திரம் உண்டு
எங்கள் தலைவனுக்கது சொந்தம் என்றும்
இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தம் செய்!
இரத்தம் சிந்தும் யுத்த அரசியல் செய்!
அப்போது தான் நீ வாழ்வாய்!
என நிகழ்காலம்; சொல்லிநிற்கின்றது
காலத்தைக் கையிலெடு
கடமையை நெஞ்சிலெடு
நடப்பது என்னவென்று
நீ முதலில் தெளிவு கொள்
இனி என்ன நடக்கணுமோ
நீ அதற்கு தயாராயிரு
உன் பணி என்னவென்று
நீ முதலில் தெரிந்து கொள்
உன் பணி இதுவென்று
உன் உறவுக்குப் பின் சொல்லிக்கொடு
எல்லோரும் பணிசெய்தால்
தேச விடியல் விரைவு பெறும்
உரிமைக்குரல் உரத்தொலிக்கட்டும்
உரிமைப் போர்க்கது உரம் சேர்க்கட்டும்
வெல்வோம் நாமென உறுதியெடு
வெற்றி எம் பக்கம் வந்து விடும்
உரிமையை வென்றுவிட
களங்கள் விரியட்டும்
சோகத்தை மாற்றிவிட
போராட்டம் தொடரட்டும்
களம் பல களமும்
புலம் பல களமும்
தினம் தினம் காண்போம்
நாளொரு பொழுது நமக்கென புலர
திடமது கொண்டு அத்தனையும் வெல்வோம்
வெற்றி நமக்கென முழக்கமிடு!
வெல்வோம் நாமென உறுதியெடு!
|
undefined
undefined

ஒருவன்....
இருளுக்கு நடுவில்
எப்படி உன்னால்
சிரிக்க முடிகிறது?
இன்னொருவன்....
உன் வாழ்வின்
ஒவ்வொரு சொட்டும்
வசீகரம் மிக்கது.
மற்றொருவன்....
இன்றும் போல
என்றும் இருந்தால்
எப்படி இருக்கும்?
நான்....
ஆற்று வெள்ளம்
அள்ளிப்போகும் கிளிஞ்சல்
வாழ்வு.
வாழ்வின் கோப்பையை
நிறைப்பது இரவு.
இரவின் கோப்பையை
நிறைப்பது நிலவு.
ஆனால்
அதிகாலை வேளைகளில்
நீ புற்களில் அழுதுவிட்டுப்போவதை
நான் மட்டுமே
அறிகின்றேன்.
என்னிரு விழிகள் போதவில்லை
உன்னுடன் சேர்ந்து அழுவதற்கு
நான் கவிஞன் என்பதால்
என்னிடம்
வர்ணம் பூசாத வார்த்தைகள் கூட இல்லை.
நீ ஏன் அழுகின்றாய் என்பதை
இந்த உலகிற்கு
சொல்லிப்போவதற்கு.
|
undefined
undefined

உந்தன் பேரழகு பார்த்த
பேதை மனம் பேசுது கேளடி..
கண்கள் உந்தன் கண்கள்
அது காந்தம் கலந்த அங்கமடி
எந்தன் இரும்பு நெஞ்சை இழுக்குதடி
நெருங்க மறுக்க வலிக்குதடி
மௌனம் உந்தன் மௌனம்
அது ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி
அத்தனையும் கவிதையாய் கொட்டுதடி
அதில் பொய்யே எனக்கு பிடித்ததடி
பேச்சு உந்தன் பேச்சு
சொற்கள் கேட்க சொக்குதடி
குயில்கள் கேட்டால் பாவமடி
உனைப்போல் பாட துடிக்குமடி
உந்தன் குரலில் பாடம் கற்குமடி
கூந்தல் உந்தன் கூந்தல்
அது இருளை வென்ற கருமையடி
என் இளமை ஒளியை தேடுதடி
என் இதயம் அதில்தான் தொலைந்ததடி
சிரிப்பு உந்தன் சிரிப்பு
இது ஒன்றே எனக்கு போதுமடி
என் பூமி சுற்ற மறுக்குதடி
பல பூகம்ப மாற்றங்கள் நிகழ்த்துதடி
அழகு உந்தன் அழகு
இந்த கவிஞனிடத்தில் வார்த்தையில்லை
அதை கவியாய் சொல்லிப்போவதற்கு
எந்தன் தமிழே எனக்கு போதவில்லை
உன்னை முழுதாய் சொல்லி முடிப்பதற்கு
|
undefined
undefined

உன் புன்னகை என்பது
என் பள்ளிப்பாடம் போன்றது.
இன்னும் படித்து முடிக்கவே இல்லை.
எத்தனை பக்கங்கள்
என்பது கூட
எனக்குத் தெரியாது.
பார்த்து எழுதித்தான்
பரீட்சையில் வென்றேன்.
இப்போதும்
பார்த்துத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
எழுதி வைத்த பக்கங்களுடன்
இன்னும் ஒன்றை சேர்த்துவிட..
தலை நரைத்த போதும்
முதுமை அழைத்த போதும்
இளமை இன்னும் இனிக்கிறதே!
உன் புன்னகை
இன்றும் இனிக்கிறதே!
அன்று போல்..
புரியாமல் விழிக்கின்றேன்
அதே பள்ளிப் பையனாய்
புரிந்ததை மட்டும் எழுதியே
கவிஞனாகி விட்டேன்.
இறக்க முன்னர்
முழுமையும் எழுதி முடித்தால்?
தமிழுக்கு இன்னுமொரு
காவியம் கொடுக்க முடியும்
என்னால்
என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து எழுதுகின்றேன்
உன் புன்னகையின் பக்கங்களை
இந்தக் காவியம்
இறக்கமுன் முடியுமா?
இல்லை
இறப்பிலே முடியுமா?
|
undefined
undefined

நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகளே
கால நீட்சியாய்
தொடர்கிறது.
பிரம்மனே காணமுடியாத
அடி நான்
முடி அவன்
ஈர்ப்பு என்பதை
அறிமுகம் செய்தது
நாங்கள் தான்
நானும் அவனும்
சஞ்சரிக்கும் பொழுதுகள்
மணித்துளிகளாய் தொடங்கி
மணிக்கணக்காய் மாறி
யுகங்களாய் தொடர்கிறது.
ஒரு மாலைப் பொழுது..
அவனைப்பார்த்தபடி நானும்
என்னைப் பார்த்தபடி அவனும்
பொழுது இரவை அழைக்க
காற்று குளிரை நிறைக்க
மரங்கள் இலைகளை உதிர்க்க
அவன் என்னை
நெருங்கி வருவதாய்
உணர்ந்தேன்
நெற்றி வியர்த்திட
சத்தமிட்டுப் பல
முத்தங்கள் பொழிந்தான்
என் நிலவு காய்ந்த முற்றத்தில்.
குளிர்ந்து போய்
நானும் ஒரு
குட்டி நிலவாய் ஆனேன்.
|
undefined
undefined

விரைவு ரயிலே
விபத்து நிகழ்ந்ததடி
உன்னோடு
அழகுப் புயலே
என்னை
அடித்துப் போனாயடி
உன்னோடு
இளைய கொடியே
என்னை
வளைத்துப் போட்டாயடி
உன்னிடையில்
நான்
நெருப்பு மனிதன் என
நினைத்திருந்தேன்
ஒரு சிவப்பு ரோஜா தந்து
அந்த
நினைப்பை சிதைத்துவிட்டாய்
என்
நிலையை மாற்றிவிட்டாய்
மாற்றங்கள் கண்டேனடி
உன் வரவில்
என்னை மாற்றிக் கொண்டேனடி
உன் செயலில்
நானாக மாட்டிக் கொண்டேனடி
உன் நினைவில்
வெள்ளை ரோஜாவே
என் உள்ளம் உனக்காக
உயிரும் அதற்காக.....
|
undefined
undefined
ஏய் மழையே!
உன்னால் தான் உருவானேன்.
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்.
மறந்து விடதே!
என்னைப் பிரிந்திட
எப்படித் துணிந்தாய்?
என்னைப் பிரிகையில்
என்ன நீ நினைந்தாய்?
வானத்தின் மீது
உனக்கென்ன மோகம்?
மேகமாய் அலைவதில்
யாருக்கு லாபம்?
முகவரி தொலைக்கவா
முகிலாகிப் போனாய்?
என்னைப் பிரிகையில்
உன்னை நீ தொலைத்தாய்.
மண்ணை ரசிக்கவா
விண்ணில் மிதந்தாய்?
சில மனிதரைப் பார்த்தா
கண்ணீர் வடித்தாய்?
இல்லை
அவர் மனங்களை அறிந்தா
மரணிக்க நினைத்தாய்?
தற்கொலை
செய்யவா தரைமீது
விழுந்தாய்?
ஒன்று மட்டும் கேள்!
உன்னை ஏந்த பூமியிருக்கும் வரை
வற்றாக் குளங்களாய் வரலாறு மாறும் வரை
வயல்கள் வரம்புகளாய் மாறும்வரை
வறட்சி என்பது தொலையும் வரை
மரங்கள் சுவாசிக்க மறுக்கும் வரை
மலர்கள் மொட்டாகவே மடியும் வரை
அன்பு மனங்களே இல்லாது போகும் வரை
ஏன்
நதிகள் என்னைத் தொட்டுக்கொண்டிருக்கும் வரை
கானல் நீரிலும் ஈரம் காணும்வரை
இப்படி ஆயிரம்
மாறா மாற்றங்கள் நிகழும் வரை
நீ நினைத்தாலும்
உன்னால் மரணிக்க முடியாது.
தரையில் மோதி தலையை சிதைத்தாலும்
தவறுதலாய் கூட நீ சாகமாட்டாய்!
இது
மனிதர்களுக்கு கிடைக்காத வரமா?
இல்லை
நீ பெற்ற சாபமா?
எனக்கது புரியவில்லை
இருப்பினும்
உன் பிரிவு தற்காலிகம்
என்பதை மட்டும்
என்னால் உணரமுடிகிறது.
இருந்தும் ஏங்குகிறேன்
உன் பிரிவிற்காகவல்ல
நீ
என் மீது பொழியாது
அந்த மண் மீது பொழிந்த
முத்தங்களிற்காக
உவர்ப்பாய் இருக்கும் எனக்கு மட்டுமே
உன் முத்தத்தின்
இனிப்பு தித்திக்கும்.
|