undefined
undefined

ஏய்!
முணு முணுக்கும் வாய்களே!
கொஞ்சம் நிறுத்துங்கள்.
படலைக்கு உள்ளே
தெருநாய் வருவதால்
உன் முற்றம் தொலையுதென்று
எவன் சொன்னான்?
தெருக்கள் எங்கும் நீ
கை வீசி நடக்கணும்.
உன் இருப்பை எப்போதும்
உறுதி செய்யணும்.
உண்மைதான்
உருப்படியாய்
என்ன செய்தாய் இதற்கு?
ஊருக்கு சொல்ல
உன்னிடம் நிறைய உண்டாயினும்
உன்னிடம் சொல்ல
ஏதேனும் உண்டாவென
உன் மனச்சாட்சியைக் கேள்
ஆமெனில்..
நீ கரைவதை தொடர்
ஆயினும்
சில வார்த்தைகளைத் தவிர்
அதைப் பின் காலம் சொல்லும்
இல்லையெனில்..
இனியாவது
சிந்தனைகொள்
மானிடப் பேரவலம் கண்டாவது
உன் மனக்கதவு திறக்கட்டும்
இரும்புச் சிறையுடைத்து
புது மனிதனாய் வெளியே வா!
விடுதலை பற்றி
அப்போது கதைப்போம்
நசிக்கப்பட்ட குரல்வளைகளே
உரிமைக் குரலை
உரத்தொலிக்கும் போது
சில திறந்த குரல்கள் மட்டும்
ஏனிங்கு மௌனித்து கிடக்கின்றன
தெருக்கள் களவு போகும் போதும்
நல்ல உறக்கம் எப்படி உனக்கு வருகிறது
வெறும் கொள்ளி வைக்க மட்டும் தானா
அன்னை பெற்றாள் நம்மை
அன்னை மண் காப்பதை
பிள்ளையன்றி யார் செய்வார்?
அடுத்தவன் வருவானோ சொல்?
நம்பிக்கைச் சிறகு நமக்கிருந்தால் தானே
சிகரத்தை நோக்கி உயரப் பறக்க முடியும்
கூரை ஏறவே சிறகு வலித்தால்
வானாய் விரிந்த சுதந்திரத்தை
எப்படி உன்னால் அனுபவிக்க முடியும்
அண்ணனை நெஞ்சில் எண்ணிடும் நெஞ்சங்கள்
அஞ்சி வாழுதல் முறையோ சொல்லுங்கள்
மண்ணினில் ஆயிரம் மறவரை விதைத்த நாம்
பகையிடம் மண்டியிட்டுப் போவோமா சொல்லுங்கள்
எங்கள் தம்பிகள் தங்கைகள் செய்திடும் போருக்கு
உரமாய் இருக்க எதையோ செய்யுங்கள்
ஆயிரம் போரினில் நாங்கள் தோற்றாலும்
இலட்சியப் போரினில் வெல்வதுதான் நம் இலக்கு
விடுதலைத் தீயது அணையாது
நெஞ்சு நிமிர்த்தி நில்லுங்கள்
வாழ்வா சாவா வரட்டும் பார்ப்போம்
தமிழா!
இது விடுதலைப் பயணம்
வேறு வழியின்றிப் போனதால்
தெரிந்து தான் குதித்தோம்
ஏதிரியை எதிர்ப்பதும்
அவன் தரும் வலியினைச் சுமப்பதும்
இறுதியில் வெற்றி பெறுவதும்
நாங்களாய் தான் இருக்கணும்
இதை விதியென்று சொல்லாதே
இது தான் வாழ்வென்று சொல்லிடவே
எங்கள் வரலாறு விரும்புகிறது.
துயரம் இமயமாய் உயர்ந்தாலும்
விடுதலைப் பறவைகளுக்கு
எப்போதும்
வானம் தொட்டுவிடும் தூரத்தில் தான்
நம்பிக்கை கொண்டு நடவுங்கள்
கொடுத்துச் சிவக்கும் கரங்கள் உமதாகட்டும்
நாளைய பொழுது நமதாகும்
|
undefined
undefined

கோடி உயிர்களில்
ஊறி வழியும்
காதல் ஒன்று
காட்சியில் நுழைகின்றது.
தேடித் தேடி
தொலைந்து போகும்
தேடலாகி
புதுக் காவியம் வரைகின்றது.
யுகங்கள் மாறி
உலகம் சுருங்கி
உள்ளங் கையில் சுழன்றாலும்
இதயம் நுழைந்த
உறவின்
வருகை நினைந்து
நகரும் நாட்கள்
யுகம் போல் தெரிகின்றது.
கால வெளியில்
நடையாய் நடந்து
கால்கள் வலிக்கிறது.
நாட்கள் மட்டும்
நகர மறுக்கிறது.
என் உறவைச் சுமக்கும்
இரும்புப் பறவை
இத் தேசம் வரும்நாள்
இன்றாய் மாறாதா?
அத் திருநாள் காண
கழியும் பொழுதெல்லாம்
நானே சேமிக்க..
காத்திருப்பு என்னவோ
இன்னும் கனதியாய்
இன்னும் இன்னும் நீளமாய்…
காத்திருத்தல் என்பது
ஒரு கடற்கரையிலோ
குளக்கரையிலோ
அல்லாமல்
விமான நிலையத்தில் என்பதால்
இதயம் இன்னும்
விரைவாய் அடிக்கிறது.
அந்த வானின் உயரம்
சென்று பார்க்க
துடியாய்த் துடிக்கிறது
|
undefined
undefined

எங்கோ பார்த்தேன்
அங்கே தொலைந்தேன்
என்பேனே
அது இவளைத்தான்
என்றோ பார்த்தேன்
அன்றே தொடர்ந்தேன்
என்பேனே
அது இவள் காலடித்தடம் தான்
நான் மெல்லிசை ரசித்த
முதல் பொழுதொன்று
சொல்வேனே
அது பிறந்தது
இவள் கொலுசில் இருந்துதான்
நான் தினம் தினம் இசைத்திடும்
பல்லவி இருக்கிறதே
அது பிறந்தது
இவள் மொனத்தில் இருந்துதான்
சூரிய தேவன் ஏவிய கதிராய்
எனைச் சுட்டெரித்த
கதை சொல்வேனே
அது
இந்தக் கண்கள் தான்
வண்டுக்கு மலர்ந்த
வாசமலரையெல்லாம்
சூடிக்கொள்ளும் வசியக்காரி
என்பேனே
அவள் இவள்தான்
உன் புன்னகை என்பது
என்ன விலை என
எனைப் பிறர் கேட்பதெல்லாம்
இவள் எனைப் பார்த்துச் சிரித்த பிறகுதான்
அப்பாவிய் நான் அன்று
அழுது புரண்ட கதை ஒன்று சொல்வேனே
அப்போது
எனை அடித்துச் சென்றவள் இவள் தான்
காவலர்களே!
இவளைப்
பிடித்துச் சிறையில் அடையுங்கள்
நானிருக்கும் பைத்தியக்காரச்
சிறையிலல்ல
வெளியில்
எங்கும் எரிகிறதே
தீ
அதை மூட்டிவிட்டு
உள்ளிருக்கும்
காதல்த்
தீவிர வாதிகளுடன்.
|
undefined
undefined

நேற்று
என்றொரு பொழுது
இன்று போலுள்ளது
என் நினைவில்
நீல வானம்
ரொம்ப தொலைவில்
காற்றுக்கூட
அன்று ஓய்வு
நிசப்தம் எங்கும்
நிரம்பி வழிய
நீள நடந்தேன்
என் வழியில்
பட்டுடுத்தி ஒரு
பட்டாம் பூச்சி
சிறகடித்தென் முன்
பறந்து போக
புயலடித்துப் போனதென்
மனதுக்குள்
நான் சிறகடித்துப் பறந்தேன்
அந்த
வானின் உயரத்தில்
இதயம் மட்டும்
சிறைப்பட்டது
அந்த சிறகுக்குள்
|
undefined
undefined

ஓ!
என் உறவுகளே!
ஒரு மரத்துப் பறவைகளே!
ஏக்கமே வாழ்வாய்
வானமே கூரையாய்
ஆன திசை முழுதும்
தணல் அள்ளி எரித்து நிற்க
கால நதி வெள்ளத்தில்
கரை ஒதுங்கிய சருகுகளாய்
நேற்றிருந்த வாழ்வு தொலைத்து
நீண்டு நெடிய பயணத்தில்
நிர்க்கதி நிலையில்
கானகத்தின் வாசல்களில் இருந்தபடி
உள்ளிருந்து உங்கள் குரல்
உலகின் திசைகளை நோக்கி
என்ன பாவம் நீர் செய்தீர்
வழமை போல்
யாரிற்குமே கேட்கவில்லை
இம்முறையும்
இரத்தோட்டம் மட்டும் இருந்தால் போதாது
சற்று ஈரம் நொதித்தால் தான்
அது இதயம்
நாம் வாழ்வதோ
இதயங்கள் அரிதான உலகத்தில்
பகுத்தறிவு செத்தவனை
மனிதன் என்று எவன் சொல்வான்
நாம் வாழ்வதோ
மிருகங்கள் நிறைந்த பூமியில்
ஈகை இருந்தால் தான் அது மனிதம்
இல்லையெனில்
அது
நடக்கும் நடக்கும் என்று
நாளைக்கடத்தும்
நடக்கும் பிணம்
நாம் வாழ்வதோ
பிணங்கள் நிறைந்த யுகத்தில்
உறவுகளே!
அம்மா உள்ளே பசித்திருக்க
வெளியே அன்னதானம் கொடுக்கும்
இதயம் படைத்தவன் நானல்ல
என் அன்னை மண் வாசம்
அதுவுமல்ல
என்னை அப்படி
என் அன்னை வளர்க்கவும் இல்லை
மன்னித்து விடுங்கள்
உறவுகளே!
இன்றிரவு
சிலதுளி கண்ணீர் மட்டுமே
உங்களிற்காக என்னிடம்..
நாளைய பொழுது விடியட்டும்
என் வியர்வை சொட்டும்
வெள்ளிப் பணம் சேர்த்து
உங்கள் வாசல் சேர
நான் உழைப்பேன்
அதுவரை
உங்களுடன் நான்
உண்ணாமல் உறங்காமல்
உள்ளத்தில்
உறவினை சுமந்தபடி
|
undefined
undefined

என்றோ?
ஆரம்பித்து விட்டேன்.
என் பயணத்தை..
பல தேசங்களின்
எல்லைகள் தாண்டி
எங்கோ?
சென்று கொண்டிருக்கின்றேன்.
எப்போது போவாய்?
என்று
ஏசுவோரை கடந்து..
எப்போது வருவாய்?
என்று
ஏங்குவோரின் வாசலில்
இப்போது நான்.
என் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒரு கூட்டம் தெரிகின்றது.
அதோ!
அதில்
ஒருத்தி
உறவையெல்லாம்
பிரிந்து வந்து
உள்ளத்தில்
கனவுகள் சுமந்தபடி
வெற்றுக் குடத்தோடு
வெயில் கொல்லும்
காலப் பெரு வெளியில்
கால் கடுக்க
காத்து நிற்கின்றாள்.
என் வருகைக்காக..
இதோ!
அவளின்
காலடித் திடலில்
இப்போது நான்..
நன்று
உண்டு
உடுத்து
உறங்கி
நாளாச்சு என்பது
நன்றாய் தெரிகின்றது.
என்னால்
என்ன செய்ய முடியும்?
இப்போது அவளுக்காக..
என்
உதிரமோ
வியர்வையோ கொடுக்து
அவள் தாகமாவது தீர்க்க
ஏங்குகின்றேன்.
ஆனாலும்..
ஒரு கணம் நின்று
சில வார்த்தை பேசி
என்னிடம் உள்ளதை
அவள் குடம் கொள்ள
என்னால்
அள்ளிக் கொடுக்க முடியாமல்
எங்கோ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
சரிவை நோக்கி..
அவளோ
ஏக்கத்துடன்
என்னைப்பார்த்தபடி
சற்று தள்ளியே நிற்கின்றாள்
தன் கால்களைக்கூட
நான் தொட்டு
வருந்தியழுது விட்டுப்போக
முடியாத தூரத்திரல்.....
|
undefined
undefined
அதிகாலை இதுவென்று
விடிவெள்ளி
சொன்ன பின்பும்
சேவல் விழித்து
சோம்பல் முறித்து
காலை விடிந்ததென்று
கூவிய பின்பும்
கோபுரத் திசையிருந்து
கோயில் மணி ஒலித்து
கும்பிட வாருங்கள்
ஏன்றழைத்த பின்பும்
சூரியன் எழுந்து
இருளைச் சலவை செய்ய
வானம் வெளுத்த பின்பும்
புல்லில் தூங்கிய
பனிக்கூட்டமெல்லாம்
மண்ணுக்குள் நுழைந்து
வேரோடுறவாடச்
சென்ற பின்பும்
மொட்டுக்கள் மலர்ந்து
வண்ணங்கள் தெளித்து
விடிகாலைப் பொழுதொன்றை
வரவேற்ற பின்பும்
அதிகாலைத் தென்றல் வந்து
காலை வணக்கம்
சொல்லி என்னை
ஆரத்தழுவிய பின்பும்
எனக்கு ஏனோ விடியவில்லை
ஏனெனில்
என் தாவணிப் பூ
இன்னும் பூக்கவில்லை
என் கண்களில்
என் காதல் தெய்வம்
இன்னும் எனக்கு
தரிசனம் தரவில்லை
ஆதலால் எனக்கு
இன்னும் விடியவில்லை
|
undefined
undefined
கண்கள் பேசிக்கொண்டன
அது காதல் பரிபாசை
இதயம் இடம் மாறியது
அது காதல் சம்பிரதாயம்
மௌனங்கள் பேசிக்கொண்டன
அது காதல் மொழி
வார்த்தைகள் பேச முனைந்தன
ஆனால்
சொற்கள் தொலைந்து போயின
ஆனாலும்
காகிதம் போட்டிட
முகவரி கிடைத்தது
எஞ்சிய வார்த்தைகளில்
மின்னஞ்சல்;;…
நவீன காதல் தூது
உள்ளத்தில் இருந்ததை
உள்ளபடி சுமந்தது
என் உள்ளடக்கத்தில் இருந்தது
உனக்கான காதல் கடிதம்
உன் உள்ளடக்கத்தில் இருந்தது
உலகறியா புது மொழி
எந்தக் காதலனும் கண்டிடாத
புது வார்த்தை
சொல்லிவிடு அன்பே
என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்
|