அந்தி மங்கிய அஸ்தமனப் பொழுதொன்றில்
மந்தி மனதாய் மரக்கிளை தாவிட
வந்து போகும் நினைவுகளோடு
பஞ்சு மெத்தை மேலே படர்ந்து
எங்கோ சென்றிட எண்ணம் கொண்டேன்.

தாயே நீயே தஞ்சம் என்று
தலையணை எடுத்து
தலைக்கொன்று கொடுத்து
இன்னொன்றை எடுத்து
இறுக அணைத்தபடி
கண்களை மூடிக்கொண்டேன்.

கண்ணெதிரே ஒருத்தி
கனவா? நினைவா? தெரியவில்லை.
நிஜமா? நிழலா? புரியவில்லை.
காற்றடைத்துக் கதவடைத்த அறைக்குள்ளே
ஓசை படாமல் எப்படி வந்தாள்?
இறுக மூடிய கண்களுக்குள்ளே
இவள் எப்படி நுழைந்தாள்?

அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டேன்.
அடுத்த கேள்வி கேட்கு முன்னே
அவள் வாய் திறந்தாள்
தமிழ் மொழிந்தாள்
தாய் மொழிக்கு தலைசாய்த்து
அவள் வாய் மொழிக்கு
செவி சாய்த்தேன்.

புரிகிறது எனக்கு
உன் புலம்பல்
என்று தொடர்ந்தாள்

எங்கும் வருவேன்!
எதிலும் வருவேன்!
இன்பம் துன்பம்
இரண்டிலும் இருப்பேன்.
இறுதி வரைக்கும் கூடவே இருப்பேன்.
உன்னையும் என்னையும்
பிரிக்கவே முடியாது!

அடிக்க அணைக்க என்னால் முடியும்!
அடுத்த வார்த்தை பேசாதே!
என்று தொடர்ந்தாள்
உரிமையோடு..

விலங்கு போட்ட என் கைகளைப் பார்!
அழுது புலம்பும் அவலச்சத்தத்தைக் கேள்!

முள் சுமக்கும் என் முற்றத்தைப்பார்!
பிஞ்சும் பூவும் துண்டாய் சிதையும்
துயரத்தைப் பார்!

அஞ்சி வாழுதல் நமக்கு இழிவு.
அழுது புலம்புதல் அதனிலும் கேடு.
நம்பி நடத்தல் நாகரிகம்.
நம்ப நடத்தலும் நாகரிகம்.

இருப்பினும்..

நம்பிக்கெட்டிட நம்மால் முடியாது.
கெஞ்சிக் கேட்பதும் கேவலம்.
கேட்டுப் பெறுவதும் நடக்காது.

போட்டுப் பிடித்தால் தான்
புரியும் புலிக்குணம்.

தாமதம் வேண்டாம் இளையவனே
போர்வை விலக்கிப் புறப்படு.
புதிய பரணி எழுதிடு.
காலக் கடமை செய்திடு.
களம் நோக்கி காலெடுத்து நட.

சொல்லி மறைந்தனள்
சோதி மின்னலாய்

துள்ளி எழுந்தேன்
துயில் கலைத்து.
துணிவாய் நடந்தேன்
துயர் துடைக்க.
அணியில் சேர்ந்தேன்
ஆயிரத்தில் ஒருவனாய்.
பணியில் புகுந்தேன்
பகை விரட்டிட.
பலமாய் நிற்கின்றேன்
பகையின் முன்னால்.
சரியாய் செய்கின்றேன்
என் கடமை.

கட்டளை வருகின்றது காற்றினிலே
அழுத்தியை அழுத்துகின்றேன் நொடியினிலே
பகை அழியுதென் வெடியாலே
தாய் மண் விடியுதென் உயிராலே
அன்னை தெரிகின்றாள் என் கண்களுக்குள்
ஆனந்த சுதந்திரம் இதுவல்லோ!

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net