உணர்வுகளை உண்மைகளை
உரைக்க வேண்டும்.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லவேண்டும்.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லவேண்டும்.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
இன்றைக்காவது சொல்லவேண்டும்.

வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
சில வார்த்தைகளை என்னால்
இதுவரை பிரசவிக்கவே முடியவில்லை.

ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
என்னுள் நிறைந்து வழியும்
மானுட உணர்வுகள்
வெளியே தெரிய
நிறையவே பேசவேண்டும்

குறைப் பிரசவமாய்
வந்து விழும் வார்த்தைகள்
முழுமை பெற வேண்டும்.

பேச வேண்டும்
நிறையவே பேசவேண்டும்

ஆசை ஆசையாய்
அழகு தமிழில்
நிறையவே பேசவேண்டும்.

பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்.

ஆனால் இப்போது
வார்த்தைகள் வெளியே வரவில்லை

அப்படியானால்
இனி எப்போது பேசுவது?
இதுதான் என் வாழ்வின்
இறுதி நிமிடமாயிற்றே!

ஆவி பிரிய துடிக்கும்
அந்த நிமிடமும் கரைகிறதே…

என்னுடன் சேர்ந்து
என் வார்த்தைகளும்
மரணித்துப் போகிறதே…

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net