undefined
undefined

நிலவு காயும் நேரம்
என் நெஞ்சுக்குள்ளே ஈரம்.
இரவு தூங்கும் நேரம்
என் இதயம் முழுதும் ஏக்கம்.
இமைகள் மூடா விழிகள்
அழுது வடிக்கும் சோகம்.
இளைய மனதின் நிலையை
வெண்ணிலவே அறிவாள் காண்.
அன்னை மடியின் ஆறுதல்
அவளின் வருகை தருமே!
அவள் அன்பு மொழிப் பேச்சு
எனைத் தூங்க வைக்கும் தாலாட்டு!
அவள் வீசும் ஒளியில்
என் இரவு வெளிச்சம் பெறுமே!
அவள் தூங்கும் பொழுது
என் இரவும் தூங்கி விடுதே!
மீண்டும் பகல் வந்து தொடவே
என் பயணம் நீண்டு தொடர..
இதோ வந்து விட்டார்கள்!
பகல் பொழுதின் பொய் மனிதர்கள்.
கடவுளே!
எப்போது முடியும்
அமைதி கலைக்கும் இந்தப் பகல்கள்?
இப்போதே வராதா?
அந்த வெண்ணிலவின் இரவு
அமைதியாக நான் அழ..
உண்மையுடன் நான் உரையாட..
உறுதியுடன் என் பயணம் தொடர..
|
undefined
undefined

எங்கிருந்தோ பிறந்து
வான் மீது வலம் வந்து
காற்றோடி போராடி
கார் முகிலாய் கவிந்து
குளிர்ந்து
உருகி
குட்டித் துளிகளாய்
புறப்பட்டு..
என்னை நனைத்தது.
நான் ரசித்த
பூவை நனைத்தது.
நிமிர்ந்து நிற்கும்
புல்லை நனைத்தது..
நான் பேசும் தமிழ்
அதில் நனைந்தபோது…
என் பாதச்சுவடுகள் பற்றி
முத்தமிட்டது.
சிதறிப் போயொரு
சத்தம் செய்தது.
அது சங்கீதம் அல்ல!
என் உறவுகளின் அவலம்!
அப்படியானால்?
இது
மழைத்துளி அல்ல.
இந்து சமுத்திரம்
கடந்து வந்த
கண்ணீர்த்துளி.
|
undefined
undefined

உணர்வுகளை உண்மைகளை
உரைக்க வேண்டும்.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லவேண்டும்.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவேண்டியவர்களுக்கு சொல்லவேண்டும்.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
இன்றைக்காவது சொல்லவேண்டும்.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
சில வார்த்தைகளை என்னால்
இதுவரை பிரசவிக்கவே முடியவில்லை.
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
என்னுள் நிறைந்து வழியும்
மானுட உணர்வுகள்
வெளியே தெரிய
நிறையவே பேசவேண்டும்
குறைப் பிரசவமாய்
வந்து விழும் வார்த்தைகள்
முழுமை பெற வேண்டும்.
பேச வேண்டும்
நிறையவே பேசவேண்டும்
ஆசை ஆசையாய்
அழகு தமிழில்
நிறையவே பேசவேண்டும்.
பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்.
ஆனால் இப்போது
வார்த்தைகள் வெளியே வரவில்லை
அப்படியானால்
இனி எப்போது பேசுவது?
இதுதான் என் வாழ்வின்
இறுதி நிமிடமாயிற்றே!
ஆவி பிரிய துடிக்கும்
அந்த நிமிடமும் கரைகிறதே…
என்னுடன் சேர்ந்து
என் வார்த்தைகளும்
மரணித்துப் போகிறதே…
|
undefined
undefined
சோகம்!
நான் காணும் உலகில்…
கழியும் ஒவ்வொரு வினாடிகளில்…
சோகம் என்பது
நிறைந்து உறைந்திருக்கின்றது.
காண்பவை
காணாதவை
கேட்பவை
கேட்காதவை
அத்தனையிலும்
உயிரோடியிருக்கும்
எப்போதும் உயிருள்ள
உயிர்கொல்லும் பொருளாய்
உருவெடுத்திருக்கின்றது.
நான் சுமப்பவை
பிறர் சுமப்பவை
என நீண்டு செல்கின்றது
முடிவிலி வரை.
அத்தனையும் மொத்தமாய்
என்னைச் சுற்றிக் கொல்(ள்)கின்றது.
எதற்காக அழுவது?
எத்தனை முறை அழுவது?
இந்தச் சொட்டுக் கண்ணீர் போதவில்லை
என் சோகம் சொல்லி அழுது வடிக்க.
கடவுளே!
எனக்கு வரமேதும் தரும் எண்ணம்
உனக்கிருந்தால்?
கடல் அளவு கண்ணீர் கொடு.
அத்தனை சோகத்திற்கும் சேர்த்து
மொத்தமாய் அழுது முடிக்க.
குறைந்த பட்சம்
குளமளவாவது கொடு
வழமையாய் நீ தரும்
குறை வரம் போல
|
undefined
undefined

என் முற்றத்து மல்லிகையே!
எப்போது கலைப்பாய்
உன் மௌனம்?
எப்போது உதிர்ப்பாய்
உன் வார்த்தை?
ஒரு முறை தனியே வா
என் அருகில்..
வெண்ணிலவு துணையிருக்க
நான் உன்னிடம் பேசவேண்டும்
யாரிடமும் சொல்லாத ஒன்றை
உனக்குமட்டும் சொல்ல வேண்டும்
சொல்லிவிடு அன்பே!
எப்போது வருவாய்?
|
undefined
undefined

அந்தி மங்கிய அஸ்தமனப் பொழுதொன்றில்
மந்தி மனதாய் மரக்கிளை தாவிட
வந்து போகும் நினைவுகளோடு
பஞ்சு மெத்தை மேலே படர்ந்து
எங்கோ சென்றிட எண்ணம் கொண்டேன்.
தாயே நீயே தஞ்சம் என்று
தலையணை எடுத்து
தலைக்கொன்று கொடுத்து
இன்னொன்றை எடுத்து
இறுக அணைத்தபடி
கண்களை மூடிக்கொண்டேன்.
கண்ணெதிரே ஒருத்தி
கனவா? நினைவா? தெரியவில்லை.
நிஜமா? நிழலா? புரியவில்லை.
காற்றடைத்துக் கதவடைத்த அறைக்குள்ளே
ஓசை படாமல் எப்படி வந்தாள்?
இறுக மூடிய கண்களுக்குள்ளே
இவள் எப்படி நுழைந்தாள்?
அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டேன்.
அடுத்த கேள்வி கேட்கு முன்னே
அவள் வாய் திறந்தாள்
தமிழ் மொழிந்தாள்
தாய் மொழிக்கு தலைசாய்த்து
அவள் வாய் மொழிக்கு
செவி சாய்த்தேன்.
புரிகிறது எனக்கு
உன் புலம்பல்
என்று தொடர்ந்தாள்
எங்கும் வருவேன்!
எதிலும் வருவேன்!
இன்பம் துன்பம்
இரண்டிலும் இருப்பேன்.
இறுதி வரைக்கும் கூடவே இருப்பேன்.
உன்னையும் என்னையும்
பிரிக்கவே முடியாது!
அடிக்க அணைக்க என்னால் முடியும்!
அடுத்த வார்த்தை பேசாதே!
என்று தொடர்ந்தாள்
உரிமையோடு..
விலங்கு போட்ட என் கைகளைப் பார்!
அழுது புலம்பும் அவலச்சத்தத்தைக் கேள்!
முள் சுமக்கும் என் முற்றத்தைப்பார்!
பிஞ்சும் பூவும் துண்டாய் சிதையும்
துயரத்தைப் பார்!
அஞ்சி வாழுதல் நமக்கு இழிவு.
அழுது புலம்புதல் அதனிலும் கேடு.
நம்பி நடத்தல் நாகரிகம்.
நம்ப நடத்தலும் நாகரிகம்.
இருப்பினும்..
நம்பிக்கெட்டிட நம்மால் முடியாது.
கெஞ்சிக் கேட்பதும் கேவலம்.
கேட்டுப் பெறுவதும் நடக்காது.
போட்டுப் பிடித்தால் தான்
புரியும் புலிக்குணம்.
தாமதம் வேண்டாம் இளையவனே
போர்வை விலக்கிப் புறப்படு.
புதிய பரணி எழுதிடு.
காலக் கடமை செய்திடு.
களம் நோக்கி காலெடுத்து நட.
சொல்லி மறைந்தனள்
சோதி மின்னலாய்
துள்ளி எழுந்தேன்
துயில் கலைத்து.
துணிவாய் நடந்தேன்
துயர் துடைக்க.
அணியில் சேர்ந்தேன்
ஆயிரத்தில் ஒருவனாய்.
பணியில் புகுந்தேன்
பகை விரட்டிட.
பலமாய் நிற்கின்றேன்
பகையின் முன்னால்.
சரியாய் செய்கின்றேன்
என் கடமை.
கட்டளை வருகின்றது காற்றினிலே
அழுத்தியை அழுத்துகின்றேன் நொடியினிலே
பகை அழியுதென் வெடியாலே
தாய் மண் விடியுதென் உயிராலே
அன்னை தெரிகின்றாள் என் கண்களுக்குள்
ஆனந்த சுதந்திரம் இதுவல்லோ!
|