கிளிநொச்சி..!
நேற்று..
கன உலகச் சீமான்கள்
வந்து வந்து
கைகொடுத்த இடம்.
கூட்டை மறந்து விட்டு
குருவிகள் கும்மி அடிக்குமென்று
பல பொய் மனிதர்கள்
வானம் கிழித்து வந்திறங்கி
நன்றாய் வானம் விட்ட இடம்.
யப்பான் மாமாக்கள் வந்து
நண்டுக் கறியோடு நன்றாய்
நா நனைத்த இடம்.
அமெரிக்கர் கூட வந்து
அலகை அசைத்த இடம்.
நோர்வே அண்ணாக்கள்
வந்தமர்ந்து வந்தமர்ந்து
பல கதிரைகள்
குப்பையில போன இடம்.
வந்தவரையெல்லாம் வரவேற்று
நாங்கள்
கனகாம்பிகைக் குள விடுதியிலை
தங்கவைக்க
எல்லாரும் நல்லாத் தூங்கி
கனவு கண்டுவிட்டு
நாசமாக்க நினைத்த இடம்.
பல நாட்டு அனுபவமும்
ஏமாற்றும் தந்திரமும்
ஒரு சிறு இனத்திடம்
அதன்
தனித் தலைவனிடம்
தோற்றுப் போன இடம்.
கிளிநொச்சி..!
இப்போது..
தென்றல் தினமும்
கந்தகம் சுமந்து
நடக்குமிடம்.
வானம் எப்போதும்
குண்டுகள் அள்ளி
இறைக்குமிடம்.
இருக்கும் ஒரு கணத்திற்கும்
ஏதாவது வெடிக்குமிடம்
ஒரு பூவரசே
பல கதைகள் சொல்லுமிடம்
வாகை மரத்தடிகளில்
வரலாற்றின் பக்கங்கள்
விரியும் இடம்
எங்கள்
சூரியன்கள் நிமிர்ந்து
நெருப்பை பொழியுமிடம்.
களத்தில் தினந்தோறும்
சிங்களம் சிதையுமிடம்.
போர் மேகம்
உலகை தூங்கும் படி
நடிக்கப் பணித்த இடம்.
அமெரிக்கா
ஜப்பான்
பிரித்தானியா
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
மாலைதீவு
அண்டை நாடு இந்தியா என
போர் நிபுணர்கள் வந்துபோகும்
புதுக் களம்.
மொத்தப் பிரபஞ்சமும்
எம் முன்னே திரண்டாலும்
தமிழ் மக்கள் சக்தி கொண்டு
போரிடும் நாங்கள் வெல்ல
அத்தனை பேரும்
தோற்கப் போகும் களம்.
இரணைமடு மாரியில கட்டாயம்
வான் பாயும்.
எங்கள் வயல்கள்
எப்போதும்
எதையாவது விதைக்கும்.
பகை அழிக்கப் பாடுபடும்.
சின்னப் பூவும்
எங்கள் வண்ணக் கனவு சுமந்து
தினமும் உழைக்கும்.
தமிழன்
சொந்தச் சிறகுகளில்
உயரப் பறக்கும் இனம்.
செங்குருதி எங்கள் வண்ணம்
சுடு குழல் எங்கள் தூரிகை
தமிழ் ஈழம்
அது
நாங்கள் வரையும் ஓவியம்
நேற்று நூறு
நேற்று முன்னாள் இன்னொரு
இரு நூறு
கணக்கு ஆரம்பமாகி
பாடம் நடக்கிறது.
‘வந்தவனை நாங்கள் விடோம்’
என்று
வன்னி மண் சிலிர்க்கிறது.
இன்னுமொரு வியட்னாமாய்
எம் மக்கள் களத்தில்
போர்த்திரை கிழித்து
புலி நகர
நாளை புலரும்
சில தினங்கள் போதும்.
கிளிநொச்சி!
போலிச் சமாதானத்தின்
முகத்திரை கிழித்த இடம்
இன அழிப்புப் போரிற்கும்
முடிவுகட்ட
அது தான் சரியான இடம்
நலிந்த பொழுதுகளின் நம்பிக்கைகளே!
உடைந்து உடைந்து
உறுதி பெற்ற நெஞ்சங்களே!
இதோ உங்கள் பொழுதுகள்
நெஞ்சு நிமிர்த்தி நடவுங்கள்
தேசப் பணியை தொடருங்கள்
இரவல் ஒளிகொள்ளும் நிலவல்ல நாங்கள்
சொந்த ஒளிகொள்ளும் சூரியன்கள்.
.