ஒரு சிறு பறவை,
பருந்துன்னை கொத்திப்போகும்.

விடுபட நினைப்பாய்
முடியாது!
சிறகினை விரிப்பாய்
சிறையில் தான் இருப்பாய்!

ஒரு திசையிருந்து மட்டுமே
காற்று வரும்.
தவமிருந்து பெற்றுத்தான்
சுவாசிப்பாய்.

ஒரு சோற்றுடன்
வயிறு நிறையும்.
நிறைய தாகம் எடுக்கும்.
உறக்கம் தூரம் போகும்
கலக்கம் அதிகமாகும்.

ஐந்து புலன்களுக்கும்
நரை விழும்.
ஆறாம் அறிவுக்கு
ஆயுள் குறையும்.

பல நூறு முறை
தொலைவாய்.
சில வேளைகளில்
இறந்து கூட போவாய்.

பெரு வெளியெங்கும்
ஒரு பூவே
பூத்து நிறைந்திருக்கும்.

நின்றால் நிற்பாய்
நடந்தால் நடப்பாய்
உண்டாலும் உண்ணமாட்டாய்
முறைத்தாலும் சிரிப்பாய்.

ஒரு வீட்டில்
ஒரு யன்னலில்
மட்டுமே
உன் பார்வை குவியும்

ஒரு ஊர்
ஒரு பாதை
என உன் உலகம்
சுருங்கிப்போகும்.

இருவரும் மட்டுமே
இவ்வுலகில் என
உணர்வாய்.

தரிசனம் வேண்டித் தவமிருப்பாய்.
தவற விட்டால்
தவியாய் தவிப்பாய்.

அத்தனை நரம்பும்
மொத்தமாய் வெடிக்கும்.
அணு உலை வெப்பமாய்
இரத்தம் கொதிக்கும்.

நிமிடத்திற்கு நூறு முறை வரை
இருதயம் துடிக்கும்.
சில வேளை துடிக்காமல் நிற்கும்.
அப்போது இறக்காமல் இறப்பாய்.

உன் மன வெளியில்
ஒரு முகம் மட்டுமே
தினம் உலவும்

ஒரு பொய்யாவது சொல்லும்படி
பல முறை கெஞ்சுவாய்.
சிறு புன்னகைக்கு
உன் உயிர் வரை விலை
கொடுக்க துணிவாய்.

எப்போதும் அருகிருக்க
நினைப்பாய்.
எப்போது முடியுமென
ஏங்குவாய்.

விளையாட்டுப் பிள்ளையாய்
அழுவாய்
சிரிப்பாய்
சினப்பாய்.
விடையில்லாக் கேள்விகள்
குவிப்பாய்.

ஒரே நாளில்
ஒரு யுகக் கவிஞனை
விஞ்சுவாய்.

பகல் இரவாய்
கனவு காண்பாய்.
கனவு முழுக்க
உன் உலகையே காண்பாய்.

பிழை பிழையாய்
பாட்டுப் படிப்பாய்.
அருகிருப்பவரை
உயிருடன் கொல்லுவாய்.

தொலைத்த வருடங்கள்
அதிகமாய் இருக்கும்.
சேர்த்த நிமிடங்கள்
சொற்பமாய் இருக்கும்.

ஏதோ வளைவில்
தானாய் நடப்பாய்.
பாதி வழியில் தடுமாறி நிற்பாய்.
மீதி வழி தெரியாது
தவிப்பாய்.

பாவம் நீ…

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net