தமிழர் எம்
தலைவிதி இது வென்று
அழும் கதை மாற்றுவோம்.

தமிழர் நாம்
யாரென்று
இத் தரணிக்கு காட்டுவோம்.

அடிமையின் தளையது
அறுபடும்
நாளின்று நம் வசம்.

எழு எழு
எழு என்று
எண் திசை எழுப்புவோம்.

எல்லோரும் ஒன்றாகி
எம்
தாய்மடி தாங்குவோம்.

உடையுது உடையுது
அடிமையின் விலங்கென்று
உரத்தே ஒலிப்போம்.

அது பொடி படும்
படி வர
உரமாகி உழைப்போம்.

விடுதலை பெறும்வரை
விழிகளில் நெருப்பேந்தி
விழித்தே இருப்போம.

தமிழீழக் கொடியேற
தெரு தனில் இறங்கியும்
அறப்போர் தொடுப்போம்.

எங்கள் வீரர்கள்
ஆடிடும்
போர் முகம் வென்றிட
தோளோடு தோள் கொடுப்போம்.

அவர் உயிர்விடும் வேளையில்
நினைந்திட்ட தமிழீழம்
இந்நாளில் சமைப்போம்.

தமிழகம் எழும் நிலை
கண்டு
புது நம்பிக்கை கொள்ளுவோம்.

அவர் நெஞ்சினில் எரியும்
எங்களின் உணர்வுக்கு
எப்போதும்
எண்ணையாய் இருப்போம்.

கைகளில் எடுத்திட்ட
கடமையை கண்டு
அவர்
கரங்களைப் பற்றுவோம்.

எமக்காய் உயரும்
அக் கரங்களைத் தொட்டு நம்
கண்களில் ஒற்றுவோம்.

நாம்
இன்னும்
கற்பனை வீட்டினில்
நித்திரை செய்திடும்
கனவினை கலைப்போம்.

நித்தமும் ஒருவரில்
குற்றமே கண்டிடும்
பழக்கத்தை மாற்றுவோம்.

வெறுஞ் சொல்லினை
நிறுத்தி
செயலினை தொடருவோம்.

குப்பையாய் போன
வைத்து நாம் காத்திடும்
கொள்கைகள் துறப்போம்.

எங்கள் கொற்றவை பற்றிடும்
கொள்கையை நாங்களும்
கற்றிடத் துணிவோம்.

தினம் களத்திடை வீழ்ந்திடும்
தாயவள் புதல்வரை
யாவரும் நினைப்போம்.

தாயகம் காத்திட
சாவினை அணைத்தவர்
சாதனை பாடுவோம்.

எம் சந்ததி வாழ்ந்திட
தம்மையே தந்தவர்
தெய்வங்கள் போற்றுவோம்.

அந்தக் கல்லறை தெய்வங்கள்
கால்த் தடம் பற்றி
நாம் நேர் நடப்போம்.

காவிய நாயகன்
காட்டிடும் திசையெலாம்
கால்களைப் பதிப்போம்.

எமைத் தாங்கிய தாயவள்
கை தொழும்
அடியவர் ஆகுவோம்.

அவள் ஆனந்த சுதந்திரம்
அடைந்திடும் நாளினை
நாமெலாம் அமைப்போம்.

கொடியவர் முகத்திரை
முழுமையாய் கிழித்திடும்
உறுதியை எடுப்போம்.

தடைகளை தக(ள)ர்த்திட
தலைமுறை காத்திட
தினசரி உழைப்போம்.

கொடுமையின் முடிவுரை
எழுதிடும்
வல்லமை கை வர
பணம் வாரி வழங்குவோம்.

காட்டிடை மழையிடை
வாட்டிடும் பசியினால்
உயிர் மாய்த்திடும் உறவினைத்
தோள்களில் தாங்குவோம்.

புதுச் சரித்திரம் படைத்திடும்
புலிகளின் கரங்களை
புலப் பலத்துடன் பற்றுவோம்.

எமைச் சுமந்தவள்
வலி பெறும் நாளிகை நகர்ந்திட
நாளை
சுகப் பிரசவம் காணுவோம்.

எங்கள் சுதந்திர தேவியின்
விலங்குகள் பொடிபட
கலங்கரையாகுவோம்.

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net