undefined
undefined


அம்மாவின் மார்புக்குள்
அப்பாவை தொட்டபடி
விளையாட்டுப் பொம்மையுடன்
தூங்குகிறேன்.
வெளியில்
நான் இலைபோட்டுக் காப்பாற்றிய
மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு
குளிருக்கு என்ன செய்யும்?
ஐயோ பாவம்!
எல்லாமே என் சொந்தம்
சொந்தங்கள் எல்லாமே எனக்காக
என்கிறது குழந்தை

எனக்குப் பசித்திருக்கும்
அவனுக்குப் பால் கொடுப்பேன்.
எனக்குத் தூக்கம் வரும்
அவனைத் தாலாட்டுவேன்.
தந்தைக்குச் சேமித்த நேரத்தையும்
அவனுக்குச் செலவு செய்வேன்
என்கிறாள் தாய்

என் வலிய தோள்களே
வலிபெறுமளவுக்கு சுமப்பேன்.
முடமான கால்களால்கூட
அவனைச் சுமந்து நடப்பேன்.
வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும்
கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன்.
என்கிறார் தந்தை.

என் தங்கை வடிவில்
எனக்கொரு மகள் உண்டு
அவளுக்கான
மெழுகுவர்த்தி ஒளி நான்
என்கிறான் அண்ணன்.

அவள் சிரிக்கும் போது
என் நெஞ்சுக் கூட்டில்
நெருப்பெரியும்.
முறைக்கும் போது
இருதயத்துக்குள்
மழை பொழியும்.
நினைக்கும் போது
முற்றிலுமாய்
தொலைந்து போவேன்
என்கிறான் அவன்.

உன்னைக் காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமல் இருக்கவும்
கற்றுத் தந்தது
உன் மீது நான் கொண்ட
காதல்
என்கிறாள் அவள்.

எனக்குத் தெரிந்த
அழகிய வார்த்தை
காதல்.
நான் எதை எழுதும் போதும்
எதிரில் வந்து
அருகில் அமர்வது
காதல்.
என்கிறான் கவிஞன்.

எனக்குத் தெரிந்த
அதி சக்தி வாய்ந்த
அணுகுண்டு
காதல்
என்கிறான் விஞ்ஞானி.

அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
உயிரைக் கொடுத்ததால்
உலகில் உருவாகியது
காதல் காவியங்கள்.
தாயே
உனக்காக
ஒன்றல்ல நூறல்ல பல்லாயிரமாய்
அவள்களும் அவன்களுமாய் நாம்
உயிரைக் கொடுக்கிறோம்
உலகில் உயர்ந்தது
உன்னதமானது
உன்மீது நாம் கொண்ட காதல்
என்கிறான் போராளி

இடம் பொருள் ஏவலிற்கேற்ப
வடிவெடுக்கும் வல்லமை கொண்ட
உயிரி ஒவ்வொன்றினதும்
உயிர்ப்பான உணர்வே
காதல் என்கிறான்
என் நண்பன்

பல சமயம்
உள்ளே மிருகம் வெளியே கடவுள்
சில சமயம்
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
என்கிறான் இன்னொருவன்

இதில் எல்லாருமாய் நான் இருக்கிறேன்
அல்லது இருக்க விரும்புகிறேன்.
காரணம்
காதலை நான் காதலிக்கிறேன்
காதலால் நான் காதலிக்கப்படுகிறேன்
என்கிறேன் நான்

undefined
undefined



கார்த்திகை 27!
காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.

வானோடும் முகிலிறங்கி
நாடெங்கும் நீர் தெளிக்கும்.
காற்றோடு குளிர்கலந்து
மேனி சில்லிட வைக்கும்.

தேசத்தின் தெருவெங்கும்
எழுச்சியும் புரட்சியுமாய்
எழில்எழுந்து கொலுவிருக்கும்.

அன்றைக்கு மலர்ந்த
மலர்களெல்லாம்
கல்லறைக்கென்றே மாலையாகும்.

கனவோடும் நினைவோடும்
ஊர்கூடித் தெருவேறும்.
கல்லறைத் திசை நோக்கி
கால் எடுத்துத்தான் நடக்கும்

வாச மலர்களோடு
பாச மலர்களெல்லாம்
கல்லறைக் கோவிலுக்குள்ளே
காலெடுத்து வைக்கும்.

அங்கே!
மாவீரத் தெய்வங்கள்
உள்ளும் புறமுமாய்
உணர்வில் வந்து நிறைவர்.

ஆன திசையெங்கும்
அவர்களே நடப்பர்.
காணும் பொருளிலெல்லாம்
முகம் காட்டுவர்.
எரியும் தீபத்தில் எழுந்து நிற்பர்.
மெல்லச் சிரிப்பர்.
எங்கள் மேனி தொடும் காற்றோடு
கலந்து வந்து
தங்கள் சாவீரச் செய்தி சொல்வர்.

உறவென்ற உணர்வெழுந்து
நெஞ்சுக்குள் நெருப்பெரிக்க
உயிரோடு உயிர்கலந்து
உறவெல்லாம் உருக,
உயிர் கரைய,
மெல்ல விழி கசிய,

கல்லறைக் கதவு திறந்து
வெளியே வந்தவர்கள்
எங்கள் விழி துடைப்பர்.

அவர் தினம் தினம் நினைந்திட்ட
தமிழீழம் உருவாக
உழைக்கும் படி உரைப்பர்.

விடியலுக்குப் பாதையிடும்
வலிமை பெறு!
விடுதலைக்கு உயிர்வரைக்கும்
விலைகள் கொடு!
தலைமுறைக்கு தலைநிமிர்வு
வாழ்வு கொடு!
தமிழன் என்றால் விழி உயரும்
பொருளை கொடு!...
என்றுரைக்கும் மறவரை
தொழுவோம்.
ஏற்ற பணி எந்நாளும்
தொடர்வோம்.

போர் விளைத்த சாம்பலிலே
புது விதைகள் முளைகொள்ளும்.
நாம் விதைத்த உயிர்களெல்லாம்
இனி எழுந்து களமாடும்.
ஊர் புகுந்த பகைவரெல்லாம்
தான் மாள அடி வீழும்
அலை எழுந்து களமாட
நாம் வாழ்ந்த ஊர் மீளும்.

எங்கிருந்தாலும்
சிறகுகள் விரிப்போம்!
எல்லைகள் தாண்டி
அங்குதான் பறப்போம்!
கல்லறை வீரரை
நெஞ்சினில் நினைப்போம்!
விளக்கேற்றும் நாளில்
உணர்வோடு கலப்போம்!

undefined
undefined
























உள்ளூறும் உணர்வை எல்லாம்
சொல்லால் நான் வடிக்கவில்லை.

சொல்லில் நான் வடிப்பதென்றால்
கடலில் துளியையே இங்குரைப்பேன்.

சொல்லால் எது சொன்னாலும்
தலைவா உனக்குப் பிடிப்பதில்லை.

ஆதலால் நான் நேற்றுவரை
உனைப் புகழ்ந்து பாட நினைக்கவில்லை.

இருந்தும் ஏனோ இன்று
உனைப் பாடாமல் இருக்க
என்னால் முடியவில்லை.

இடம்மாறி வாழும் போதும்
இதயத்தில் தலைவா உன்னை
தினம் தோறும் சுமக்கின்றேன்.

தடம் மாறிப் போகா உன்னை
தலைவனாய் கொண்ட எந்தன்
உணர்வுகள் தொடுதே உன்னை

எங்கு தான் வாழ்ந்தாலும்
தாய்மடி தாங்கும் எண்ணம்
துளிகூடக் குறைந்ததில்லை.

என் நிலை மறந்த போதும்
உன்னை நான் மறப்பதில்லை.

கண்ணிமை கவிழும் போதும்
கரிகாலா!
கனவிலும் தழுவும் உன்னை
பாடாது இருக்க என்னால்
நினைத்தாலும் முடியவில்லை.

எல்லாம் புரக்கும் இறைவா!
வல்ல தலைவா!
வாழ்க பல்லாண்டு.

undefined
undefined

“கண்களும் களவாடும்”
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”
சொல்லக் கேட்டதுண்டு.
கேட்டுவிட்டு சத்தமிட்டு
சிரித்ததும் உண்டு.

அப்போது
சிந்தித்தபோது சிந்தனைக்குள்
சிக்கவில்லை.
ஒரு முறைக்கு பலமுறை
பரீட்சித்துப் பார்த்துவிட்டு
சொல்வதெல்லாம்
சுத்தப் பொய் என்று முடிவெடுத்து
பலகாலம் ஆன பின்பு….

ஒரு மழை நாளில்…
ஒரு கணப்பொழுது…
வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது.

இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது.
புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது.
சரியான ஒரு சமன்பாடு கண்டது.
அழகான ஒரு முகவரி தந்தது.

அது
அவளும்
அவள் பார்வையும்
அந்தக் கணப்பொழுதுமாய் இருந்தது.

அவள், நான்
நான்கு கண்கள்
ஒரு பார்வை
ஒரே பார்வை

சிறைப்பிடிக்க முடியாமல்
என் பெரிய மூளைக்கு
பைத்தியம் பிடித்தது.

அனுபவித்துத் துடித்தது
அப்பாவி இதயம்

பார்த்துக்கொண்டிருக்க
பட்டப்பகலில்
என்னைக் களவாடின
அந்தக் கண்கள்

ஒரு நொடி நிரந்தரமாய் உறைந்து மீண்டது
இளைய இரத்தம்

சுவாசத்திற்கு
மூச்சுத்திணறியது.

சுதாகரித்து பார்த்தபோது
முழுவதும் நனைந்திருந்தேன்.
மழைத்துளி ஒவ்வொன்றும்
முத்து முத்தாய் சிரித்தது.

அவள்… அவள்
அதோ சென்று கொண்டிருக்கிறாள்
ஏதுமறியாதவள் போல்..

என் இதயம்
அங்கே துடிக்கிறது.
அன்பே ஆருயிரே
அறிவாயா
இல்லை அறிந்தும் அறியாமையால்
என்னைக் கொல்வாயா?

undefined
undefined

உன் இருவிழிப்பார்வையடி
என் மனம் கரையுதடி

நீ வெண்பனித் தூறலடி
மெல்லத் தொட்டாய்
மனம் தினம்
தேடித் தொலையுதடி

நீ ஒரு துளி மழைத்துளி
என்னில் வீழ்ந்தாய்
உயிர் மலைபோல் அலை எழும்
பெரும் சமுத்திரமடி

நீ சிறு பொறி தீப்பொறி
என்னை சுட்டாய்
என் ஆணவம் சாம்பலடி
நான் ஆயுள் முழுதும்
உன் அடிமையடி

undefined
undefined


விடுதலை வேண்டி
உழைக்கும் மக்களே!
இப்போது இழக்க ஏதும் இன்றி நாம்
காக்க யாரும் இன்றி நாம்.

தினம் தினம்
நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது.
பெரும் துயர்.
இன்னமும் ஓயவில்லை
அழுகுரல்கள்.

துயரில் மூழ்கித் தவிக்கும்
தமிழினமே!
அழு!

அழும் வரை அழு
உன் கவலை தீர்க்க
கடல் கொண்டு வடித்தாலும் போதாது.
இருப்பினும் அழு
கண்ணீர் வற்றும் வரை அழு
சொட்டுக் கவலையாவது விட்டுப்போகட்டும்
கண்ணீரோடு

அழுது முடித்தவுடன் எழு
ஆயிரம் துயர் வரினும்
எழுந்து நிற்போம் என எழு

இனிவரும் காலங்கள் எங்களுக்கென
எழுதிவை

மீண்டும் மறுநாள்
உன்னைத் தேடித் துயர் வரின்
துணிந்து எதிர்கொள்
அப்போதும்
தேவையெனில் அழு
சொட்டுக்கவலையாவது
விட்டுப் போகட்டும்

ஆனால்
இன்று போல் எழு
முடிவெடு
முரசறை
போராடு

இது விதியல்ல
இது தான் எம் வாழ்வு
வரலாறு.

undefined
undefined


கண்டியிலிருந்து
யாழ் செல்லும் சாலையில்
“தமிழீழம் வரவேற்கிறது”
இப்போது அகற்றப்பட்டிருக்கலாம்.

கிளிநொச்சி மத்தியில்
இப்போது புலிக்கொடி
பட்டொலிவீசிப் பறக்காதிருக்கலாம்.

ஆனால்
கடந்து செல்லும்
ஓவ்வொரு பிடி மண்ணிலும்
எங்கள் சகோதரரின்
செங்குருதி தோய்ந்திருக்கிறது.

எங்கோ தொலைவில்
எங்கள் காதுகளுக்கு கேட்காதபடி
முனகல் ஒலிகள்
இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.

பெருமூச்சும் கண்ணீரும்
இன்னமும் ஓய்ந்துவிடவில்லை

அடிமைக்குறி எம் முதுகில் ஆழப்பொறிப்பது பற்றியே
சிங்களம் சிந்திக்கிறது.
மகுடங்களின் மாயையில் மக்களை ஏமாற்றும்
முயற்சியில் மட்டுமே
எங்களில் சில மந்தி(ரி)கள்

ஓற்றை வரியிலோ
மேடைப்பேச்சிலோ
கடந்த தசாப்தங்களை
அப்படியே தின்றுவிட்டுப் போவதற்கு
யாரையும் கடந்த தடவை
மந்திரி ஆக்கவில்லை
மறக்கவேண்டாம்.

மலர் மாலைகளை
யாரும் யாருக்கும் எப்போதும் அணியலாம்.
ஒருபோதும்
உறைவாளுக்கு ஓய்வென்றுவிட்டு
துருப்பிடிக்க வைத்துவிடக்கூடாது.

என் இனிய பனை மரங்களே!
சதியால் துடிதுடிக்கும் ஈழக்கனவுகளை
உயிர்ப்பிக்க
இப்போது நம்கையில்
வாக்குச் சீட்டு!

கவனம்!
இருப்பிருக்கும் சத்தையெல்லாம்
தன் பாட்டில்
சவட்டிக் குடிக்கும்
“காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்

உங்களையும்
தங்களைப் போல்
வளைந்து போகும் படி பணிக்கும்
உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்
புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்

எங்கள் தந்தையும் அண்ணனும்
நட்டு வைத்த பனைமரங்களே!
மறவாதீர்!
எப்போதும் எதுவரினும்
நிமிர்ந்து நிற்றலே
எங்கள் அடையாளம்

உங்கள் அருகிருக்கும்
உறவுகட்கும் சொல்லுங்கள்
வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் அப்பால்
வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால்
வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு
நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம்.

undefined
undefined


அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா

வண்ணமயில் ஏறிவரும்
வடிவேலனுக்கு
அரோகரா

முருகா!
என்னப்பா இது?

இனம் மொழி தாண்டி
உன்ர வாசலிலை நிறையுது
பக்தர்கள் வெள்ளம்

கடையில விக்கிற
பிள்ளையார் சிலையில
மேடின் சைனா இருக்கு

கடைக்குட்டிக்கு வாங்கிற
அம்மம்மா குழலை
வடக்கத்தையான் விற்கிறான்

ஐப்பான் காரன்
வந்து
“சோ” றூம் போடுறான்

பாகிஸ்தான் காரன் வந்து
பாய் வி(ரி)க்கிறான்

கண்ணுக்கு தெரியிற
இடமெல்லாம்
துரோகிகள் கூட்டம்

கண்கட்டி
வித்தை காட்டுது
சிங்கள தேசம்

வெள்ளை வேட்டி கட்டி
சுது மாத்தையாக்கள்

வெறும் மேலோட
களு பண்டாக்கள்

போதாக்குறைக்கு

விமானச் சீட்டுக்கு
விலைக்குறைப்பு

ஊரடங்குச்சட்டத்துக்கு
நேரக்குறைப்பு

ஏ ஒன்பது
பாதை திறப்பு…

இப்படி நீளுது
திருவிளையாடல்

எங்களுக்கு மட்டும்
ஓர வஞ்சனை

முன்னூறாயிரம் பேருக்கு
முள்ளுக்கம்பிச் சிறை

பலபேருக்கு
இலங்கை வரத்தடை

ஏனெனில்
நாங்கள் கேட்டது
அலங்காரச் சுதந்திரமல்ல
ஆனந்த சுதந்திரம்

உனக்கென்னப்பா
நூறு குடத்தில அபிசேகம்

மண் போட்டால்
மண் விழாத
மக்கள் கூட்டம்

வண்ண மயில் ஏறி
வள்ளி தெய்வயானையோடு
வடிவழகு வருகை வாழ்வு

கந்தா
கடம்பா
கதிர்வேலா

உன்ர வீதியில இருந்துதான்
எங்கள ஏமாத்த நினைச்சவங்களை
கண்டு பிடிச்சனாங்கள்

உன்ரை வீதியிலை
பசித்திருந்துதான்
ஒரு பிள்ளை
வடக்கத்தையான்
முகத்திரை கிழிச்சவன்

எங்கட மக்கள் மறந்தாலும்
நீயாவது மறக்காமல்
இரப்பா

உனக்காச்சும்
ஒரு சமயத்தில
கோவணம் மிச்சம்

இப்ப கொட்டாவி விடுற
எங்கட சனத்துக்கு?

எல்லாருக்கும் நல்லவரம்
நல்கும்
தமிழ்க்கடவுளே
முருகா
எனக்கும் ஒரு வரம்
தந்துவிடு

திருந்த நினைக்காத
சனத்தை திருத்தவும் வேண்டாம்

முள்ளுக்கம்பி
வளவுக்குள்ள
வருந்திற எங்கடை சனத்துக்கு
வாழ்வளிக்கவும் வேண்டாம்

இனக்கொலை புரிந்த
தென்னிலங்கைக்கு
தண்டனையும் வேண்டாம்

வஞ்சகத்தோடை வளவுக்குள்ள
வாறவங்களை
கண்டு பிடிக்கவும் வேண்டாம்

உனக்கு கொஞ்சம் பக்கத்தில
காக்கா பீச்சினபடி
நிற்கிற சங்கிலியன்
சிலை

மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற
மாவீரன் பண்டாரவன்னியன்
கல்லறை

முன்னர் கண்டியை
ஆண்ட
விக்கிரம ராஜசிங்கன்

ஆழக்கடலாண்ட
சோழ மகாராஜன்

தமிழர் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகிற
விடுதலைப் பெருநெருப்பு
பிரபாகரன்

இப்பிடி
மண்ணிலை முளைச்சிருக்கிற
வரலாறை
உன்ர பக்தர்களுக்கு
நினைவிருத்து
அதுபோதும்

வரலாறு விட்ட வழியில்
காலம் இட்ட கட்டளைப்படி
சிங்கள அந்நிய ஆதிக்கம்
அகன்ற நாள் வர

நாங்களும்
ஒரு நாள்
உன் வாசல் வருவோம்

அதுவரை

அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா

வண்ணமயில் ஏறிவிளையாடும்
வடிவேலனுக்கு
அரோகரா

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net