உச்சி மீது வானம் வீழாத
குறையாய்
தினம் கொண்டு வந்து
கொட்டிப் போகிறார் பாருங்கள்!

வேரறுந்தாடி வீழ்ந்து போகின்றன மரங்கள்
சமாதானம் தந்த சுவர்களும் கூரைகளும்
சமாதானம் போலவே சுக்குநூறாகிப் போகின்றன

கூடிழந்து குருதி வெள்ளத்தில் குருவிகள்
குண்டும் குழியுமாய் வீதிகள்
சாமியும் கூட அகதியாய்

தினம் முண்டமும் தலையுமாய்
கொன்று முடிக்கலாம் என்றொரு நினைப்பு
மல்லி மகிந்தாவுக்கு!

முடியாது!
முடியவே முடியாது!
தமிழ்ச்சாதியின் ஆணிவேரை
அறுத்தெறிவதென்பது
நடக்கவே நடக்காது!

எங்கள் ஆண்ம உறுதியின் ஆணிவேர்
அசையவே அசையாது!

குண்டு போட்டு கொதிக்க வைத்திருப்பது
தமிழன் செங்குருதியை…

இன்று
இன மான உணர்வு கொண்டு
தேசமெலாம் வீதியிறங்கியிருப்பது
ஒரு சிறு பொறி
இது நாளை
பெரு நெருப்பாகி முளாசி எரியும்.

பகையே!
நீ வந்து நின்று வாலாட்டுவது
வன்னி மண்ணில்
என்பது நினைவிருக்கட்டும்.

ஆடி முடிக்க தந்த சந்தர்ப்பத்தை
எங்கள் கோடி வரை வந்து விட்டதாய்
கொண்டாடுவது தப்பு
தப்பு மேல் தப்பு!

இருந்து பார்!
இன்னும் சில காலம் தான்
உன் பிடிமானம் எம்மண்ணில்…

எல்லாம் புரக்கும் இறைவன்
வல்ல தலைவன்
திசைகாட்டி விழி அசைப்பான்.

இன்றோ நாளையோ
எங்கள் இதய பூமியின்
சாளரங்கள் திறக்கும்..

ஓயாத அலை கொண்டு
பெரும் புயலடிக்கும்.

அந்தப் பெரும் புயலில்
பொடிப் பொடியாகிப் பறக்கும்
சிங்களப் பேரினவாதக் கனவு.

இடி மின்னல் கொண்டுதான்
விடிகாலை ஒவ்வொன்றும்
இனி எம் மண்ணில் புலரும்.

நீ தொடும் ஒரு பிடி மண்ணுக்கும்
உயிர்ப் பலி எடுத்துத்தான்
பூக்கள் கூட இனி இங்கு மலரும்.

நெருப்பாற்று நீச்சலில்
இப்போது நாங்கள்
ஆயினும் நீந்திக் கடப்பது நிச்சயம்!

கஞ்சிக்கு வழியற்று நாமிருந்தாலும்
காற்றுக்கு இங்கில்லைத் தட்டுப்பாடு
கந்தகம் கலந்து வீசினாலும்
அது தென்றலாய் தான்
எங்களை தொடும்.
வலி மேல் வலி வந்து வதைத்தாலும்
சுதந்திரம் சுமந்துதான்
எப்போதும் நடப்போம்!

எங்கள் நாளைய சந்ததிக்காக..
முன்னாளில் ஆண்ட
எங்கள் மூத்தோருக்காக..
அக்கினித்தாண்டவம் ஆயினும்
ஆடிமுடிப்பதென்றாயிற்று!

கொடுப்பவர் எல்லாம் கொடுக்க
கொண்டுவந்து கொட்டுங்கள்!
எது வரை என்று பார்ப்போம்.
எத்தனை முறை என்று எண்ணுவோம்.

இது
பண்டார வன்னியன்
பாதம் பட்ட மண்
பகையிடம் பணியாது.

இரணைமடு வான் பாயும் வல்லமையை
ஒரு போதும் இழக்காது!

வயலோடு முகிலிறங்கி
வளம் கொழிக்கும்.
அழகான
தெருவெல்லாம் தேரோடும்.
நம்பிக்கை நாள் தோறும்
பூப் பூக்கும்.

மீண்டும் இங்கே வசந்தம் விரியும்.
தமிழ் ஈழம்
ஆளாகிப் புதிதுடுத்து
அழகள்ளிச் சொரியும்.

இனி வாற ஆடி அமாவாசைக்கு
பாலாவியில தீத்தம் ஆடுவம்
எனும் நம்பிக்கை நமக்கிருக்கு.

கோணமலை நாளை
கொடியேறக் காத்திருக்கு…

சந்திவெளியும் கதிரவெளியும்
எமை ஆரத்தழுவி
ஆனந்தக் கூத்தாடும்
அவா கொண்டிருக்கு…

நீர்வேலியும் நிலாவரையும்
வாரி இறைக்க வரம் வேண்டி
தவமிருக்கு…

இதோ!
இப்போ!
அருகில் செல்வந்து விழும் சத்தம்
காதைப் பிளக்கிறது.

குண்டுச் சிதறல் வந்து
கூரையில் விழுகிறது.

ஆயினும்
பால் நிலவேறும் அழகள்ளி
பருகிவிட்டுத் தான் படுக்கைக்குப்
போகின்றேன்.

போர் தான் வாழ்வென்றான பின்பு
இதற்கெல்லாம் அஞ்சும் எண்ணம்
துளிகூட எனக்கு இல்லை…

உங்களுக்கு?

அஞ்சற்க!
எங்கள் நட்சத்திரங்களோடு
பேசிய நம்பிக்கையில் தான்
சொல்கின்றேன்.
விடுதலைப் பெருநாள் குறிக்கப்பட்டுவிட்டது!

எஞ்சிய நாட்கள் விரைவாய் கரைய
தொடர்ந்து நடவுங்கள்.
உங்கள் கடமையை கையிலெடுத்தபடி…

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net