பூ மலரும் காலையிலே
வான் நுழைந்து வண்டு வரும்

கோயில் மணி ஓசை முன்னே
கிபீர் வந்து வட்டமிடும்

குலதெய்வம் துணையிருந்தும்
குண்டு வந்து கூரை விழும்

ஆன திசை அத்தனையும்
அவலம் எழுந்து சத்தமிடும்

ஓலமிடும் ஒலியோடு
உயிர் வேறாய் போயிருக்கும்

பிறகென்ன?

கூட்டி அள்ளும் படியாய்த்தான்
குதறுப்பட்ட குடியிருக்கும்

கோலமயில் அழகான
குல வாழ்வு முடிந்திருக்கும்

வான் உயர்ந்த கனவுகளில்
கந்தகம் கலந்திருக்கும்

வளமான வாழ்வதனில்
புழுதி மண் படிந்திருக்கும்

நிலவு காய்ந்த முற்றத்தில்
நெருப்பெரிந்து போயிருக்கும்

மின்னலைகள் வழியாக
விழி கசியும் செய்தி வரும்

பத்திரிகைப் பக்கங்களில்
இரத்தம் தோய்ந்த படமிருக்கும்

கண்விழித்துப் பார்த்துவிட்டு
வழமைக்கு நாம் போய்விடுவோம்.

இல்லையெனில்…
நெஞ்சுக்குள் மட்டும்
நெருப்பெரிப்போம்.

மீண்டும்
வான் நுழைந்து வண்டு வர…
கிபீர் வந்து வட்டமிட…
குண்டு வந்து கூரை விழ…

நாமுமொரு காரணமாய்
ஆகும் கதை பெரும் சோகம்.


தமிழா!
உண்மையை உரத்தொலிக்க
உனக்கெதற்கு அச்சம்?

உரிமைக்கு குரல் கொடுக்க
உன்னைத் தடை என்ன செய்யும்?

உறவுக்கு உணவளிக்க
யார் கேட்பார் கணக்கு?

உரிமை உன்னது
கடமையும் உன்னது
காலம் கைகளில்…

மனமிருந்தால் இடமுண்டு.
தன்மான உணர்விருந்தால்
உனக்கு
தமிழன் எனும் பெயருண்டு.

இனி சொல்ல
உனக்கு என்ன உண்டு?
செயல் தொடங்கு…



தமிழர் எம்
தலைவிதி இது வென்று
அழும் கதை மாற்றுவோம்.

தமிழர் நாம்
யாரென்று
இத் தரணிக்கு காட்டுவோம்.

அடிமையின் தளையது
அறுபடும்
நாளின்று நம் வசம்.

எழு எழு
எழு என்று
எண் திசை எழுப்புவோம்.

எல்லோரும் ஒன்றாகி
எம்
தாய்மடி தாங்குவோம்.

உடையுது உடையுது
அடிமையின் விலங்கென்று
உரத்தே ஒலிப்போம்.

அது பொடி படும்
படி வர
உரமாகி உழைப்போம்.

விடுதலை பெறும்வரை
விழிகளில் நெருப்பேந்தி
விழித்தே இருப்போம.

தமிழீழக் கொடியேற
தெரு தனில் இறங்கியும்
அறப்போர் தொடுப்போம்.

எங்கள் வீரர்கள்
ஆடிடும்
போர் முகம் வென்றிட
தோளோடு தோள் கொடுப்போம்.

அவர் உயிர்விடும் வேளையில்
நினைந்திட்ட தமிழீழம்
இந்நாளில் சமைப்போம்.

தமிழகம் எழும் நிலை
கண்டு
புது நம்பிக்கை கொள்ளுவோம்.

அவர் நெஞ்சினில் எரியும்
எங்களின் உணர்வுக்கு
எப்போதும்
எண்ணையாய் இருப்போம்.

கைகளில் எடுத்திட்ட
கடமையை கண்டு
அவர்
கரங்களைப் பற்றுவோம்.

எமக்காய் உயரும்
அக் கரங்களைத் தொட்டு நம்
கண்களில் ஒற்றுவோம்.

நாம்
இன்னும்
கற்பனை வீட்டினில்
நித்திரை செய்திடும்
கனவினை கலைப்போம்.

நித்தமும் ஒருவரில்
குற்றமே கண்டிடும்
பழக்கத்தை மாற்றுவோம்.

வெறுஞ் சொல்லினை
நிறுத்தி
செயலினை தொடருவோம்.

குப்பையாய் போன
வைத்து நாம் காத்திடும்
கொள்கைகள் துறப்போம்.

எங்கள் கொற்றவை பற்றிடும்
கொள்கையை நாங்களும்
கற்றிடத் துணிவோம்.

தினம் களத்திடை வீழ்ந்திடும்
தாயவள் புதல்வரை
யாவரும் நினைப்போம்.

தாயகம் காத்திட
சாவினை அணைத்தவர்
சாதனை பாடுவோம்.

எம் சந்ததி வாழ்ந்திட
தம்மையே தந்தவர்
தெய்வங்கள் போற்றுவோம்.

அந்தக் கல்லறை தெய்வங்கள்
கால்த் தடம் பற்றி
நாம் நேர் நடப்போம்.

காவிய நாயகன்
காட்டிடும் திசையெலாம்
கால்களைப் பதிப்போம்.

எமைத் தாங்கிய தாயவள்
கை தொழும்
அடியவர் ஆகுவோம்.

அவள் ஆனந்த சுதந்திரம்
அடைந்திடும் நாளினை
நாமெலாம் அமைப்போம்.

கொடியவர் முகத்திரை
முழுமையாய் கிழித்திடும்
உறுதியை எடுப்போம்.

தடைகளை தக(ள)ர்த்திட
தலைமுறை காத்திட
தினசரி உழைப்போம்.

கொடுமையின் முடிவுரை
எழுதிடும்
வல்லமை கை வர
பணம் வாரி வழங்குவோம்.

காட்டிடை மழையிடை
வாட்டிடும் பசியினால்
உயிர் மாய்த்திடும் உறவினைத்
தோள்களில் தாங்குவோம்.

புதுச் சரித்திரம் படைத்திடும்
புலிகளின் கரங்களை
புலப் பலத்துடன் பற்றுவோம்.

எமைச் சுமந்தவள்
வலி பெறும் நாளிகை நகர்ந்திட
நாளை
சுகப் பிரசவம் காணுவோம்.

எங்கள் சுதந்திர தேவியின்
விலங்குகள் பொடிபட
கலங்கரையாகுவோம்.









உச்சி மீது வானம் வீழாத
குறையாய்
தினம் கொண்டு வந்து
கொட்டிப் போகிறார் பாருங்கள்!

வேரறுந்தாடி வீழ்ந்து போகின்றன மரங்கள்
சமாதானம் தந்த சுவர்களும் கூரைகளும்
சமாதானம் போலவே சுக்குநூறாகிப் போகின்றன

கூடிழந்து குருதி வெள்ளத்தில் குருவிகள்
குண்டும் குழியுமாய் வீதிகள்
சாமியும் கூட அகதியாய்

தினம் முண்டமும் தலையுமாய்
கொன்று முடிக்கலாம் என்றொரு நினைப்பு
மல்லி மகிந்தாவுக்கு!

முடியாது!
முடியவே முடியாது!
தமிழ்ச்சாதியின் ஆணிவேரை
அறுத்தெறிவதென்பது
நடக்கவே நடக்காது!

எங்கள் ஆண்ம உறுதியின் ஆணிவேர்
அசையவே அசையாது!

குண்டு போட்டு கொதிக்க வைத்திருப்பது
தமிழன் செங்குருதியை…

இன்று
இன மான உணர்வு கொண்டு
தேசமெலாம் வீதியிறங்கியிருப்பது
ஒரு சிறு பொறி
இது நாளை
பெரு நெருப்பாகி முளாசி எரியும்.

பகையே!
நீ வந்து நின்று வாலாட்டுவது
வன்னி மண்ணில்
என்பது நினைவிருக்கட்டும்.

ஆடி முடிக்க தந்த சந்தர்ப்பத்தை
எங்கள் கோடி வரை வந்து விட்டதாய்
கொண்டாடுவது தப்பு
தப்பு மேல் தப்பு!

இருந்து பார்!
இன்னும் சில காலம் தான்
உன் பிடிமானம் எம்மண்ணில்…

எல்லாம் புரக்கும் இறைவன்
வல்ல தலைவன்
திசைகாட்டி விழி அசைப்பான்.

இன்றோ நாளையோ
எங்கள் இதய பூமியின்
சாளரங்கள் திறக்கும்..

ஓயாத அலை கொண்டு
பெரும் புயலடிக்கும்.

அந்தப் பெரும் புயலில்
பொடிப் பொடியாகிப் பறக்கும்
சிங்களப் பேரினவாதக் கனவு.

இடி மின்னல் கொண்டுதான்
விடிகாலை ஒவ்வொன்றும்
இனி எம் மண்ணில் புலரும்.

நீ தொடும் ஒரு பிடி மண்ணுக்கும்
உயிர்ப் பலி எடுத்துத்தான்
பூக்கள் கூட இனி இங்கு மலரும்.

நெருப்பாற்று நீச்சலில்
இப்போது நாங்கள்
ஆயினும் நீந்திக் கடப்பது நிச்சயம்!

கஞ்சிக்கு வழியற்று நாமிருந்தாலும்
காற்றுக்கு இங்கில்லைத் தட்டுப்பாடு
கந்தகம் கலந்து வீசினாலும்
அது தென்றலாய் தான்
எங்களை தொடும்.
வலி மேல் வலி வந்து வதைத்தாலும்
சுதந்திரம் சுமந்துதான்
எப்போதும் நடப்போம்!

எங்கள் நாளைய சந்ததிக்காக..
முன்னாளில் ஆண்ட
எங்கள் மூத்தோருக்காக..
அக்கினித்தாண்டவம் ஆயினும்
ஆடிமுடிப்பதென்றாயிற்று!

கொடுப்பவர் எல்லாம் கொடுக்க
கொண்டுவந்து கொட்டுங்கள்!
எது வரை என்று பார்ப்போம்.
எத்தனை முறை என்று எண்ணுவோம்.

இது
பண்டார வன்னியன்
பாதம் பட்ட மண்
பகையிடம் பணியாது.

இரணைமடு வான் பாயும் வல்லமையை
ஒரு போதும் இழக்காது!

வயலோடு முகிலிறங்கி
வளம் கொழிக்கும்.
அழகான
தெருவெல்லாம் தேரோடும்.
நம்பிக்கை நாள் தோறும்
பூப் பூக்கும்.

மீண்டும் இங்கே வசந்தம் விரியும்.
தமிழ் ஈழம்
ஆளாகிப் புதிதுடுத்து
அழகள்ளிச் சொரியும்.

இனி வாற ஆடி அமாவாசைக்கு
பாலாவியில தீத்தம் ஆடுவம்
எனும் நம்பிக்கை நமக்கிருக்கு.

கோணமலை நாளை
கொடியேறக் காத்திருக்கு…

சந்திவெளியும் கதிரவெளியும்
எமை ஆரத்தழுவி
ஆனந்தக் கூத்தாடும்
அவா கொண்டிருக்கு…

நீர்வேலியும் நிலாவரையும்
வாரி இறைக்க வரம் வேண்டி
தவமிருக்கு…

இதோ!
இப்போ!
அருகில் செல்வந்து விழும் சத்தம்
காதைப் பிளக்கிறது.

குண்டுச் சிதறல் வந்து
கூரையில் விழுகிறது.

ஆயினும்
பால் நிலவேறும் அழகள்ளி
பருகிவிட்டுத் தான் படுக்கைக்குப்
போகின்றேன்.

போர் தான் வாழ்வென்றான பின்பு
இதற்கெல்லாம் அஞ்சும் எண்ணம்
துளிகூட எனக்கு இல்லை…

உங்களுக்கு?

அஞ்சற்க!
எங்கள் நட்சத்திரங்களோடு
பேசிய நம்பிக்கையில் தான்
சொல்கின்றேன்.
விடுதலைப் பெருநாள் குறிக்கப்பட்டுவிட்டது!

எஞ்சிய நாட்கள் விரைவாய் கரைய
தொடர்ந்து நடவுங்கள்.
உங்கள் கடமையை கையிலெடுத்தபடி…

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net