நாளொரு பொழுதாய்
நடைமுறை உலகை
நானும் அவளும்
காணப் புறப்பட்டோம்.
நல்ல நண்பர்களாய்…
ஒரு நாள்…
நிலவை ரசிக்க நினைத்தோம்.
ஆனால்..
இரவுவரை தனித்திருக்கும்
தைரியம் நமக்கிருக்கவில்லை.
நிலவு வரும் வரை நாமிருக்க
நம் கலாச்சார கண்களும்
நம்மை விட்டுவைக்கவில்லை.
இன்னொரு நாள்…
கடற்கரை சென்று
காலாற நடந்து
காற்று வாங்க நினைத்தோம்.
ஆனால்…
நம் கைகளைக் கோர்த்தபடி
காலடி பதித்து
அலை நுரை ரசிக்க முடியவில்லை.
அவள் தடுமாறி
அலைக்குள் விழுந்த போதும்
என்னால் அவளை
அணைக்க முடியவில்லை.
கடலோ அவளை நனைத்துப் போனது.
மூழ்கப் போனவளை
மீட்டு வந்தது கண்டும்
எங்களுக்குள் ஊடல் என்று
ஊர் சொன்னது.
அலை கூட அப்போது
நுரை நுரையாய் சிரித்தது.
காற்றும் ஏதோ
கிசு கிசுவென்று கிசுகிசுத்தது.
மழை நாளொன்றில்..
ஒரு குடைக்குள் எங்களால்
நிற்க முடியவில்லை.
நட்பு நனையாதிருக்க
எங்களில் ஒருவர்
மழையில்
நனைய வேண்டியதாயிற்று.
அப்போதெல்லாம்
நட்பு அழுதது.
ஊரோ
துளித்துளியாய் சிரித்தது.
எத்தனையை சுமந்து
நட்பைக் காத்த போதும்
அவன் வாசல்ப் படி வரைக்குமே
என்னால் பயணிக்க முடிகிறது
நட்பையும் நம்மையும் காப்பாற்றியபடி
நட்சத்திரங்களை எண்ணியபோது
அருந்ததி வெள்ளி காட்டுவதாய்
சொன்னார்கள்
அவள் காலில்
முள் எடுத்த போது
மெட்டி மாட்டுவதாய்
சொன்னார்;கள்.
இத்தனைக்குப் பின்னும்
எங்கள் நட்பு
செத்துப் போகவில்லை.
உள்ளமும் கெட்டுப் போகவில்லை.
ஆனால்
எனக்கு
மணமகள் பார்த்த போதும்
அவளுக்கு
மணமகன் பார்த்த போதும்
சில வாய்கள் சொன்னதை
எங்கள் செவிகள் கேட்டபோது
ஆறாம் அறிவு
கொஞ்சம் சிந்தித்தது
நட்பை ஏற்காத உலகில்
என்றும் நண்பர்களாய்
வாழ நினைத்ததால்..
அவளுக்கு
இப்போது வாய்க்கட்டு
எனக்கு
இப்போது கால்க்கட்டு
நட்பு மட்டும் ராஐ நடை போடுகிறது
எனக்கும் அவளுக்கும் இடையில்
எப்போதும்....
simply superb !!!