மழை பொழியும் ஓர் நாளில்
மலர் சூடும் கல்லறைகள்
உமைப் பிரிந்த உறவெல்லாம்
உமைத்தேடி வந்திருக்கும்

உமைத்தேடி அழுதழுது
உம்முன்னே உயிர் துடிக்கும்
உமக்கென்று ஏதேதோ
கொண்டு வந்து சேர்த்திருக்கும்

மணம் நிறைத்த மலராலே
மாலைகளும் அவை சூடும்
மனம் நிறைந்த வேதனையால்
விழி நீரை அவை சிந்தும்

அண்ணன் உரை தொடர்கையிலே
அமைதியாக செவிமடுக்கும்
மணியோசை ஓய்ந்த பின்னே
மௌனமாக அஞ்சலிக்கும்

வேளை வந்து சேர்ந்தவுடன்
விளக்கொன்றை அவை ஏற்றும்
மழைத்துளிகள் வீழ்கையிலும்
சுடர் ஒளிரும் கல்லறை முன்

சுடர் ஒளியின் நடுவினிலே
முகம் தெரியும் இரவினிலே
முகம் காணும் விழிகள் எல்லாம்
குளமாகும் நீராலே

நீர் வழிந்த முகங்கள் எல்லாம்
உமை நினைந்தே சிவந்திருக்கும்
நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்
வந்து வந்து போயிருக்கும்

நீர் நிறைத்த நினைவுகளோ
நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்
நீர் சுமந்த கனவதுவோ
நிமிர்ந்து நட என்றிருக்கும்

உங்கள் பணி தொடர்ந்திடவே
உறுதியெடு என்றிருக்கும்
விடை பெறும் வேளையிலே
விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்
உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்
உம் பணி தொடர..

0 Your Comments:

.

கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து.. உலகம் உன்னைப் போற்றும் - லெனின்.

Popular Posts

Followers

widgeo.net