தமிழா!
காலமிது காலமிது
காத்திருந்த காலமிது.
வேளையிது வேளையிது
பொங்கு தமிழ் வேளையிது.
ஒன்றுபடு ஒன்றுபடு
ஓரணியில் ஒன்றுபடு.
கையிலெடு கையிலெடு
உன் கடனை கையிலெடு.
செய்து முடி செய்து முடி
செவ்வனே செய்து முடி.
வேரோடு விழுதுகள் சேர்கையிலே
வீறோடு நிமிரும் பெரு விருட்சம்.
நாடெல்லாம் நாம் நிமிர்ந்து எழுகையிலே
எங்கள் ஊரெல்லாம் விடிவது உறுதிபடும்.
பாரோடே போராடும் போர் நமது
இதை பகுத்தறிந்து நடத்தலே
முதல் கடன் உனது.
யாருமே கொடுக்காத அடி நமது
அதை கொடுத்திட சேர்த்திடும்
வளம் பெரிது.
இதை உணர்ந்து நீ நடப்பாய்
தமிழா!
உன் மனம் பெரிது.
|
மழை பொழியும் ஓர் நாளில்
மலர் சூடும் கல்லறைகள்
உமைப் பிரிந்த உறவெல்லாம்
உமைத்தேடி வந்திருக்கும்
உமைத்தேடி அழுதழுது
உம்முன்னே உயிர் துடிக்கும்
உமக்கென்று ஏதேதோ
கொண்டு வந்து சேர்த்திருக்கும்
மணம் நிறைத்த மலராலே
மாலைகளும் அவை சூடும்
மனம் நிறைந்த வேதனையால்
விழி நீரை அவை சிந்தும்
அண்ணன் உரை தொடர்கையிலே
அமைதியாக செவிமடுக்கும்
மணியோசை ஓய்ந்த பின்னே
மௌனமாக அஞ்சலிக்கும்
வேளை வந்து சேர்ந்தவுடன்
விளக்கொன்றை அவை ஏற்றும்
மழைத்துளிகள் வீழ்கையிலும்
சுடர் ஒளிரும் கல்லறை முன்
சுடர் ஒளியின் நடுவினிலே
முகம் தெரியும் இரவினிலே
முகம் காணும் விழிகள் எல்லாம்
குளமாகும் நீராலே
நீர் வழிந்த முகங்கள் எல்லாம்
உமை நினைந்தே சிவந்திருக்கும்
நீர் வாழ்ந்த நாட்கள் எல்லாம்
வந்து வந்து போயிருக்கும்
நீர் நிறைத்த நினைவுகளோ
நெஞ்சில் வலி மூட்டியிருக்கும்
நீர் சுமந்த கனவதுவோ
நிமிர்ந்து நட என்றிருக்கும்
உங்கள் பணி தொடர்ந்திடவே
உறுதியெடு என்றிருக்கும்
விடை பெறும் வேளையிலே
விம்மி வெடிக்கும் நெஞ்சமெல்லாம்
உம்மைச் சுமந்தபடியே உறுதியெடுக்கும்
உம் பணி தொடர..
|
தாயே! என்று நான் வருவேன்?
உன் மடி தவழ..
அன்று கழிந்து தான் இறப்பேன்.
உன் மடியில் புதைய..
என்று தான் வருவேனோ?
உன் முலையில் பால் பருக..
அன்று தான் தொலையும்
என் துக்கம்.
அதன் பின்பு தான் தழுவும்
எனை தூக்கம்.
தாயே! தூக்கம் தொலைத்து
ரொம்ப நாளாச்சு.
ஏக்கம் நிறைந்து நெஞ்சு
பாழாய் போச்சு.
தாயே!
ஊர்விட்டு ஊர் பிரிகையிலேயே
உயிர் பாதி போச்சு.
உனை விட்டு இங்கு வாழ்கையில்?
அந்த மீதிக்கும்
என்னவோ ஆச்சு.
நீ நலமாய் இருக்கையிலே
உள்ளம் கொஞ்சம் ஆறிச்சு.
இப்போ
உந்தன் துயர் கேட்கையிலே
கொடும் வெம்மையிலே வேகிற்று.
என்ன பாவம் நாம் செய்தோம்?
உன்னைப் பிரிந்து தவிக்க..
என்ன பிழை நீ செய்தாய்?
எம்மைத் தொலைத்துத் துடிக்க..
என்னைப் போல பல பேர்க்கு
உன்னைச் சேரத் துடிப்பு.
எந்தத்துயர் தொடர்ந்தாலும் நிற்காது
நம் பயணத் துடுப்பு.
ஊர் போகும் கனவோடே
என் நாட்கள் நகரும்.
உனை மீட்கும் போரில்
என் பங்கும் நிச்சயம் இருக்கும்.
|
ஓயாத அலையாக உழைத்தவனே!
பார் புகழும் சாதனைகள் படைத்தவனே!
வாழ்வை வரலாறாய் தந்தவனே!
வல்லமை எதுவென்று சொன்னவனே!
போரை வாழ்வாய் கொண்டவனே!
புலிவீரம் புதிதென்று சொன்னவனே!
பகை நடுங்க களம் செய்த புலிமகனே!
ஏன் இன்று தூங்குகின்றாய் எழு மகனே!
புயலாகி பகைவீடு செல்பவனே!
பகை புரியாத புதிராக வெல்பவனே!
பகைவருக்கு தலை வலியாய் வாழ்ந்தவனே!
தலைவருக்கு பலம் சேர்த்த தளபதியே!
தமிழருக்கு பயன் தரு வாய் நிமிர்ந்தவனே!
தரணியெங்கும் தமிழர் பலம் சொன்னவனே!
விடை பெறுவாய் என்று நாம் நினைக்கவில்லை!
வீர வேங்கை என்றும் மண்ணில் சாவதில்லை!
நெருப்பாய் பகையை எரித்தவனே!
என்றும் இருப்பாய் எம் நெஞ்சங்களில்!
வெடிகுண்டு தோற்றதையா உன்னை மண்ணில் வீழ்த்த!
விதி மீண்டும் வென்றதையா உன்னைச் சாவு கொல்ல!
ஊர் மீட்கும் கனவோடே
உன் நாட்கள் நகர,
உனை இழக்கும் நாள் ஒன்று
ஏன் எமக்கு புலர்ந்ததையா?
களமுனைகள் தேடுதையா உந்தனது கால்தடம்!
காற்றலைகள் தேடுதையா உந்தனது கட்டளை!
தோழமைகள் ஏங்குதையா உந்தன் முகம் காண!
காவலரண் காயுதையா உன்னை தினம் காண!
நீர் நிறைத்த நினைவுகளோ!
நெஞ்சில் வலி மூட்டுதையா!
நீர் சுமந்த கனவதுவோ!
நிமிர்ந்து நட என்குதையா!
உன் கனவை சுமந்தபடி!
பணி தொடர்வோம் உறுதி!
விடை பெறும் வீரனே!
வீர வணக்கங்கள் உந்தனுக்கு!
|
இறக்கப் பிறந்த இதயம் ஏனோ
துடிக்கத் துடிக்கின்றது
உன்னைக் காணும் பொழுதுகளில்
உயிர்க்கத் துடிக்கும் இதயம் ஏனோ
துடிக்க மறுக்கின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்
இமைக்க மறுக்கும்
விழிக(ளு)ள் சுமக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
அழுது வடிக்க
அவையும் துடிக்கின்றன
உன்னைக் காணாத பொழுதுகளில்
இறக்கை முளைத்து
பறந்து வருகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
இறந்து பிறந்து
துடியாய் துடிக்கின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்
வார்த்தைகள் வற்றிட
வறுமையில் தவிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
கண்ணதாசனை விஞ்சிடும்
கவிதைகள் கொட்டுதே
உன்னைக் காணாத பொழுதுகளில்
எதையோ சொல்லாது
ஏங்கியே நிற்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
அதனை வைத்தே
காவியம் வரைகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்
ஆறடிச் சிலையொன்று
அசைவதாய் உணர்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
நூறடிச் சிற்பமாய்
நெஞ்சிலே கனக்கின்றாய்
உன்னைக் காணாத பொழுதுகளில்
சிரித்து நிற்பதை
பார்த்து ரசிக்கின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
அதை நினைத்து நினைத்து
சிரித்தே அழுகின்றேன்
உன்னைக் காணாத பொழுதுகளில்
சொல்ல வந்ததை
சொல்லாது போகின்றேன்
உன்னைக் காணும் பொழுதுகளில்
அதை சொல்லிச் சொல்லியே
கண்ணாடி அழுகின்றது
உன்னைக் காணாத பொழுதுகளில்
|
உணர்வுகளை உண்மைகளை
உரைக்க முடியவில்லை.
உள்ளதை உள்ளபடி
ஊர்கேட்க சொல்லமுடியவில்லை.
சொல்லால் மட்டுமே சொல்லவேண்டியவற்றை
சொல்லவே முடியவில்லை.
அன்றைக்கே சொல்லவேண்டியவற்றை
என்றைக்கும் சொல்லமுடியவில்லை.
வாய் இருந்தும் மொழி தெரிந்தும்
வாய்மை என் பக்கம் இருந்தும்
வார்த்தைகளை என்னால்
பிரசவிக்கவே முடியவில்லை.
என ஒரு ஊமை புலம்புகின்றான்.
அவன் வரிகளில்….
ஏக்கம் கவலை இயலாமை
வெறுப்பு விரக்தி வேதனை என
நிறைந்து வழிகின்றன
மானிட உணர்வுகள்.
இன்னும் இன்னும்
வந்து விழுகின்றன.
குறையாய்ப் பிரசவிக்கும்
ஒரு மனிதனின் வரிகள்.
பேச முடியாததால்
தான் பூரணமடையாதவனாய்
புலம்புகின்றான்.
குறைபாடு உடையவனாய்
குற்றம் சுமத்துகின்றான்
தன்மீது.
ஆனால்…
அவன் உணர்வதையே
நானும் உணர்கின்றேன்.
அவன் சொல்வதையே
நானும் சொல்கின்றேன்.
அவனுள் நிறைந்து வழியும்
மானிட உணர்வுகளே
என்னுள்ளும் வந்து விழுகின்றன.
அவன் சுமப்பதையே
நானும் சுமக்கின்றேன்.
ஆனால் நான் ஊமையில்லை.
என்னால் நன்றாக பேசமுடியும்.
இருந்தும் என்னால் பேச முடியவில்லை.
ஏன்?
நான் பூரணமடையாதவனா?
இல்லை குறைபாடு உடையவனா?
இல்லை
என்னைச்சுற்றியுள்ளவர்கள்
குறைபாடுடையவர்களா?
பூரணமடையாதவர்களா?
என
என்னுள் மட்டுமே
என்னால்
இன்னும் கேட்க முடிகிறது.
அப்போதும்
வார்த்தைகள் வெளியே வரவேயில்லை.
ஆனால் பேசுகின்றேன்
நிறையவே பேசுகின்றேன்
வாய் இருந்தும் ஊமையாய்.
|
இருளை விரட்டிய சந்தோசத்தில்
உற்சாகமாய் இருந்தது
ஒரு காலைப்பொழுது
முல்லை நிலம் முற்றுகையிட
படையெடுத்துக் கொண்டிருந்தன
முகில்க்கூட்டங்கள்;
வட்டமடித்து வட்டமடித்து
புது மெட்டிசைத்துக்கொண்டிருந்தன
வானம் பாடிகள்
உதிர்வின் சலசலப்பிற்கே இடமில்லாமல்
கலகலப்பாய் காட்சியளித்தன
மலர்கள்
அமைதியாய் என்னை
வருடிக்கொண்டிருந்தது
இதமான காலை இளங்காற்று
என் இளமைக்கும்
இந்த இயற்கைக்கும்
ஏதோ இணைப்பு இருப்பதாய்
சிந்தித்துக் கொண்டிருந்தேன்
காலை வணக்கம்
காதில் ஒலித்தது
இந்தக் காளைக்கு
இதமான காலைப்பொழுதில்
செந்தமிழ் தேன்மொழியால்
காலை வணக்கம் சொன்ன
செந்தமிழ் தேன்மொழியாள்
யாராய் இருக்கும்
ஆவல் மேலிட
கண்களை திறந்து பார்த்தேன்
என்ன அதிசயம்
மின்னல் வெட்டி
மழை பொழிவதாய்
இன்னுமோர் இயற்கையை
கண் எதிரே கண்டேன்
இப்போது
மீண்டும் சிந்தித்தேன்
இந்த இயற்கைக்கும்
எனக்கும்
என்ன இணைப்பு என்று
அப்பொழுது
இதயம் பேசியது
உனக்காக பிறந்தவள்
என்று.
|