“கண்களும் களவாடும்”
“இதயங்கள் இடம்மாறித்துடிக்கும்”
சொல்லக் கேட்டதுண்டு.
கேட்டுவிட்டு சத்தமிட்டு
சிரித்ததும் உண்டு.
அப்போது
சிந்தித்தபோது சிந்தனைக்குள்
சிக்கவில்லை.
ஒரு முறைக்கு பலமுறை
பரீட்சித்துப் பார்த்துவிட்டு
சொல்வதெல்லாம்
சுத்தப் பொய் என்று முடிவெடுத்து
பலகாலம் ஆன பின்பு….
ஒரு மழை நாளில்…
ஒரு கணப்பொழுது…
வாழ் நாளை வளம் மாற்றிப் போட்டது.
இது நாள் முடிவை முழுதாய் தகர்த்தது.
புதிதாய் ஒரு முதல் வரி எழுதியது.
சரியான ஒரு சமன்பாடு கண்டது.
அழகான ஒரு முகவரி தந்தது.
அது
அவளும்
அவள் பார்வையும்
அந்தக் கணப்பொழுதுமாய் இருந்தது.
அவள், நான்
நான்கு கண்கள்
ஒரு பார்வை
ஒரே பார்வை
சிறைப்பிடிக்க முடியாமல்
என் பெரிய மூளைக்கு
பைத்தியம் பிடித்தது.
அனுபவித்துத் துடித்தது
அப்பாவி இதயம்
பார்த்துக்கொண்டிருக்க
பட்டப்பகலில்
என்னைக் களவாடின
அந்தக் கண்கள்
ஒரு நொடி நிரந்தரமாய் உறைந்து மீண்டது
இளைய இரத்தம்
சுவாசத்திற்கு
மூச்சுத்திணறியது.
சுதாகரித்து பார்த்தபோது
முழுவதும் நனைந்திருந்தேன்.
மழைத்துளி ஒவ்வொன்றும்
முத்து முத்தாய் சிரித்தது.
அவள்… அவள்
அதோ சென்று கொண்டிருக்கிறாள்
ஏதுமறியாதவள் போல்..
என் இதயம்
அங்கே துடிக்கிறது.
அன்பே ஆருயிரே
அறிவாயா
இல்லை அறிந்தும் அறியாமையால்
என்னைக் கொல்வாயா?
|
உன் இருவிழிப்பார்வையடி
என் மனம் கரையுதடி
நீ வெண்பனித் தூறலடி
மெல்லத் தொட்டாய்
மனம் தினம்
தேடித் தொலையுதடி
நீ ஒரு துளி மழைத்துளி
என்னில் வீழ்ந்தாய்
உயிர் மலைபோல் அலை எழும்
பெரும் சமுத்திரமடி
நீ சிறு பொறி தீப்பொறி
என்னை சுட்டாய்
என் ஆணவம் சாம்பலடி
நான் ஆயுள் முழுதும்
உன் அடிமையடி
|

விடுதலை வேண்டி
உழைக்கும் மக்களே!
இப்போது இழக்க ஏதும் இன்றி நாம்
காக்க யாரும் இன்றி நாம்.
தினம் தினம்
நெஞ்சைப் பிழந்து சாய்க்கிறது.
பெரும் துயர்.
இன்னமும் ஓயவில்லை
அழுகுரல்கள்.
துயரில் மூழ்கித் தவிக்கும்
தமிழினமே!
அழு!
அழும் வரை அழு
உன் கவலை தீர்க்க
கடல் கொண்டு வடித்தாலும் போதாது.
இருப்பினும் அழு
கண்ணீர் வற்றும் வரை அழு
சொட்டுக் கவலையாவது விட்டுப்போகட்டும்
கண்ணீரோடு
அழுது முடித்தவுடன் எழு
ஆயிரம் துயர் வரினும்
எழுந்து நிற்போம் என எழு
இனிவரும் காலங்கள் எங்களுக்கென
எழுதிவை
மீண்டும் மறுநாள்
உன்னைத் தேடித் துயர் வரின்
துணிந்து எதிர்கொள்
அப்போதும்
தேவையெனில் அழு
சொட்டுக்கவலையாவது
விட்டுப் போகட்டும்
ஆனால்
இன்று போல் எழு
முடிவெடு
முரசறை
போராடு
இது விதியல்ல
இது தான் எம் வாழ்வு
வரலாறு.
|

கண்டியிலிருந்து
யாழ் செல்லும் சாலையில்
“தமிழீழம் வரவேற்கிறது”
இப்போது அகற்றப்பட்டிருக்கலாம்.
கிளிநொச்சி மத்தியில்
இப்போது புலிக்கொடி
பட்டொலிவீசிப் பறக்காதிருக்கலாம்.
ஆனால்
கடந்து செல்லும்
ஓவ்வொரு பிடி மண்ணிலும்
எங்கள் சகோதரரின்
செங்குருதி தோய்ந்திருக்கிறது.
எங்கோ தொலைவில்
எங்கள் காதுகளுக்கு கேட்காதபடி
முனகல் ஒலிகள்
இன்னமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கிறது.
பெருமூச்சும் கண்ணீரும்
இன்னமும் ஓய்ந்துவிடவில்லை
அடிமைக்குறி எம் முதுகில் ஆழப்பொறிப்பது பற்றியே
சிங்களம் சிந்திக்கிறது.
மகுடங்களின் மாயையில் மக்களை ஏமாற்றும்
முயற்சியில் மட்டுமே
எங்களில் சில மந்தி(ரி)கள்
ஓற்றை வரியிலோ
மேடைப்பேச்சிலோ
கடந்த தசாப்தங்களை
அப்படியே தின்றுவிட்டுப் போவதற்கு
யாரையும் கடந்த தடவை
மந்திரி ஆக்கவில்லை
மறக்கவேண்டாம்.
மலர் மாலைகளை
யாரும் யாருக்கும் எப்போதும் அணியலாம்.
ஒருபோதும்
உறைவாளுக்கு ஓய்வென்றுவிட்டு
துருப்பிடிக்க வைத்துவிடக்கூடாது.
என் இனிய பனை மரங்களே!
சதியால் துடிதுடிக்கும் ஈழக்கனவுகளை
உயிர்ப்பிக்க
இப்போது நம்கையில்
வாக்குச் சீட்டு!
கவனம்!
இருப்பிருக்கும் சத்தையெல்லாம்
தன் பாட்டில்
சவட்டிக் குடிக்கும்
“காக்கா” கொண்டு வந்து போட்ட குருவிச்சைகள்
உங்களையும்
தங்களைப் போல்
வளைந்து போகும் படி பணிக்கும்
உங்களுக்கும் ஒட்டி வாழக் கற்றுத்தரும்
புதிதாய் ராஐதந்திரம் புகட்டும்
எங்கள் தந்தையும் அண்ணனும்
நட்டு வைத்த பனைமரங்களே!
மறவாதீர்!
எப்போதும் எதுவரினும்
நிமிர்ந்து நிற்றலே
எங்கள் அடையாளம்
உங்கள் அருகிருக்கும்
உறவுகட்கும் சொல்லுங்கள்
வாழ்தலுக்கும் வீழ்தலுக்கும் அப்பால்
வெற்றிக்கும் தோல்விக்கும் அப்பால்
வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு
நிமிர்ந்து நிற்றலே எங்கள் அடையாளம்.
|

அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
வண்ணமயில் ஏறிவரும்
வடிவேலனுக்கு
அரோகரா
முருகா!
என்னப்பா இது?
இனம் மொழி தாண்டி
உன்ர வாசலிலை நிறையுது
பக்தர்கள் வெள்ளம்
கடையில விக்கிற
பிள்ளையார் சிலையில
மேடின் சைனா இருக்கு
கடைக்குட்டிக்கு வாங்கிற
அம்மம்மா குழலை
வடக்கத்தையான் விற்கிறான்
ஐப்பான் காரன்
வந்து
“சோ” றூம் போடுறான்
பாகிஸ்தான் காரன் வந்து
பாய் வி(ரி)க்கிறான்
கண்ணுக்கு தெரியிற
இடமெல்லாம்
துரோகிகள் கூட்டம்
கண்கட்டி
வித்தை காட்டுது
சிங்கள தேசம்
வெள்ளை வேட்டி கட்டி
சுது மாத்தையாக்கள்
வெறும் மேலோட
களு பண்டாக்கள்
போதாக்குறைக்கு
விமானச் சீட்டுக்கு
விலைக்குறைப்பு
ஊரடங்குச்சட்டத்துக்கு
நேரக்குறைப்பு
ஏ ஒன்பது
பாதை திறப்பு…
இப்படி நீளுது
திருவிளையாடல்
எங்களுக்கு மட்டும்
ஓர வஞ்சனை
முன்னூறாயிரம் பேருக்கு
முள்ளுக்கம்பிச் சிறை
பலபேருக்கு
இலங்கை வரத்தடை
ஏனெனில்
நாங்கள் கேட்டது
அலங்காரச் சுதந்திரமல்ல
ஆனந்த சுதந்திரம்
உனக்கென்னப்பா
நூறு குடத்தில அபிசேகம்
மண் போட்டால்
மண் விழாத
மக்கள் கூட்டம்
வண்ண மயில் ஏறி
வள்ளி தெய்வயானையோடு
வடிவழகு வருகை வாழ்வு
கந்தா
கடம்பா
கதிர்வேலா
உன்ர வீதியில இருந்துதான்
எங்கள ஏமாத்த நினைச்சவங்களை
கண்டு பிடிச்சனாங்கள்
உன்ரை வீதியிலை
பசித்திருந்துதான்
ஒரு பிள்ளை
வடக்கத்தையான்
முகத்திரை கிழிச்சவன்
எங்கட மக்கள் மறந்தாலும்
நீயாவது மறக்காமல்
இரப்பா
உனக்காச்சும்
ஒரு சமயத்தில
கோவணம் மிச்சம்
இப்ப கொட்டாவி விடுற
எங்கட சனத்துக்கு?
எல்லாருக்கும் நல்லவரம்
நல்கும்
தமிழ்க்கடவுளே
முருகா
எனக்கும் ஒரு வரம்
தந்துவிடு
திருந்த நினைக்காத
சனத்தை திருத்தவும் வேண்டாம்
முள்ளுக்கம்பி
வளவுக்குள்ள
வருந்திற எங்கடை சனத்துக்கு
வாழ்வளிக்கவும் வேண்டாம்
இனக்கொலை புரிந்த
தென்னிலங்கைக்கு
தண்டனையும் வேண்டாம்
வஞ்சகத்தோடை வளவுக்குள்ள
வாறவங்களை
கண்டு பிடிக்கவும் வேண்டாம்
உனக்கு கொஞ்சம் பக்கத்தில
காக்கா பீச்சினபடி
நிற்கிற சங்கிலியன்
சிலை
மண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கிற
மாவீரன் பண்டாரவன்னியன்
கல்லறை
முன்னர் கண்டியை
ஆண்ட
விக்கிரம ராஜசிங்கன்
ஆழக்கடலாண்ட
சோழ மகாராஜன்
தமிழர் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகிற
விடுதலைப் பெருநெருப்பு
பிரபாகரன்
இப்பிடி
மண்ணிலை முளைச்சிருக்கிற
வரலாறை
உன்ர பக்தர்களுக்கு
நினைவிருத்து
அதுபோதும்
வரலாறு விட்ட வழியில்
காலம் இட்ட கட்டளைப்படி
சிங்கள அந்நிய ஆதிக்கம்
அகன்ற நாள் வர
நாங்களும்
ஒரு நாள்
உன் வாசல் வருவோம்
அதுவரை
அரோகரா
அரோகரா
நல்லூர்க் கந்தனுக்கு
அரோகரா
வண்ணமயில் ஏறிவிளையாடும்
வடிவேலனுக்கு
அரோகரா
|

நில்லுங்கள்
மனிதர்களே!
வண்ணங்கள் கொண்டு
எங்கள் வாழ்க்கையை
வனைய வேண்டாம்
நிறையப் புனைகதை புனைந்து
எங்களுக்கு
அனுதாபம் தேடித்தரவும்
வேண்டாம்
நாங்கள் தொலைத்ததில்
கொஞ்சத்தையும்
சுமப்பதில்
கொஞ்சத்தையும்
அங்கங்கே
எழுத்துப்பிழைகளோடாவது
எழுதினால் போதும்
நாங்கள்
மீண்டும் உயிர்பெறுவோம்.
நம்புங்கள்
மனிதர்களே!
முள்ளுக்கம்பிகளுக்குள்
முளைத்து நிற்பவை
எங்கள் கனவுகளின்
சமாதிகளே
மீட்பின் பெயரால்
நடந்துகொண்டிருப்பது
அழிப்பின்
அதி உச்சமே
இங்கு
வசந்தம் என்பது
வாடகைக்கு கூட இல்லை
மறுவாழ்வு என்பது
மருந்துக்கும் இல்லை.
ஒரு இரவுக்கும்
பகலுக்கும்
இடையில்
பல வருடங்களை தின்றபடிதான்
எங்கள் காலச்சக்கரம்
சுழல்கின்றது
பல வார்த்தைகளை
தின்றுவிட்டுத்தான்
சில வார்த்தைகள்
பேசுகின்றோம்
இங்கே
குயில்கள் கூவுவதில்லை
காதில்
கேட்பதெல்லாம்
முகாரி ராகங்களே
கால்களுக்கு காப்புறுதி
உயிர்கள் என்பதால்
எந்த மயிலும்
நடனம் ஆட நினைப்பதில்லை
தாயொரு கூடாரத்தில்
அதன் சேயொரு கூடாரத்தில்
நடுவில்
ஏழு வரியில்
முள்ளுக்கம்பிகளும்
அதைச்சுற்றி “மல்லி”த் தம்பிகளுமாய்
எங்கள் வாழ்வு
எங்கோ தொலைந்து கரைகிறது
எந்தப்பகலிலும்
இருளே நிறைந்து
வழிகிறது
ஒரு குடம்
தண்ணிக்கு நாலு நாள்
வரிசையில் நிற்போம்
வெறும் கஞ்சிக்கு கையேந்தி
இன்னும் எத்தனை நாள்
எங்கள்
ஜீவனை வளர்ப்போம்?
உறவைச் சந்திக்கும்
நேரத்தில்
தள்ளி நின்று அழுவோம்
சந்திக்க உறவே இல்லாதோர்
தனியிருந்தும் அழுவோம்
கொஞ்சம் சிந்திக்கும் நேரத்தில்
சிறகொடிந்து துடிப்போம்
ஆயினும்
பறக்கவே துடிக்கின்றோம்
சுதந்திரமாய்
கந்தகம் கலந்த போதும்
சுதந்திரம் சுமந்த காற்றை
எப்போது தொலைத்தோமோ
அப்போதே
செத்துப்போனோம்
ஆயினும்
இப்போதும் உயிர்வாழ்கின்றோம்
மறுவாழ்வு வேண்டி
மறுவாழ்வு
என்பது
மீண்டும் கந்தகம் கலந்தாலும்
சுதந்திரம்
சுமந்த காற்றை
சுவாசித்தலே
ஆறாத
எங்கள் காயத்திற்கு
அருமருந்து
அந்த சாலைகளின் ஓரங்களில்
காலாற நடத்தலே
|

புல்லோடும் புயலோடும்
கல்லோடும் கடலோடும்
பேச முடிந்த
கவிஞர்களே!
என்ன திடீர் மௌனம்
உங்களுக்குள்ளே?
புயலுக்கு முந்தியதா?
பிந்தியதா?
என
உங்கள் மௌனங்களுக்கு
உங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியா?
நல்ல கதை.
புயல்களை
புதிது புதிதாய்
பிறப்பிப்பதே
நீங்கள்தானே.
நீங்களே தூங்கினால்
நாளைய பொழுதுகளின்
நம்பிக்கையை
யார் கொடுப்பது?
நீண்ட இரவுகளின்
இராச்சியத்திற்கு
உங்கள் இமைகளை
அனுமதிக்காதீர்
கசியும் உங்கள்
கண்களைத் துடையுங்கள்
கடலலை மோதும்
ஒவ்வொரு கரைகளுடனும் பேசுங்கள்
முள்ளிவாய்க்காலில்
சாட்சி இன்றி நடந்த யுத்தத்தை
சாட்சியுடன் எழுதுங்கள்
காற்றில் தவழும்
அத்தனை அலைகளுடனும்
உரையாடுங்கள்
கஞ்சிக்கு உயிர் விலை
கொடுத்ததையும்
காற்றே களவாடப்பட்டு
கந்தகமும் பொசுபரசும்
பரிசளிக்கப்பட்டதையும்
மருந்துக்கு
மண் அள்ளிப் போட்டதையும்
பெற்றதாய் மார்பில்
செத்தபின் பால்குடித்த
துயரத்தையும்
என
எங்கள் துயரத்தை
எங்கள் நியாயத்தை
எங்களுக்கு இழைக்கப்பட்ட
கொடுமைகளை
நீதிக்கு இழைக்கப்பட்ட
அநீதியை
மொத்தமாய்
பதிவுசெய்யுங்கள்
இலக்கு
தெளிவாய் தெரியும்
விடுதலைப்பயணத்தில்
இருள் என்று ஒன்று இல்லை.
இருப்பின்
அதன் பெயர்
குறைந்த வெளிச்சம்
என்று
உங்கள் கவிதைகள்
தீக்குச்சி கிழிக்கட்டும்
கேளுங்கள் தரப்படும்
தரப்படாவிட்டால்
தரும்வரை கேளுங்கள்
தட்டுங்கள் திறக்கப்படும்
திறக்கப்படாவிட்டால்
திறக்கும் வரை தட்டுங்கள்
என்று
மக்களுக்கு மனனஞ்செய்யட்டும்
உங்கள் கவிதைகள்
கவிஞர்களே!
தயவு செய்து
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்
செத்த கவிஞர்கள்
கடமையையும்
நீங்கள் தான் செய்யவேண்டும்
பிறக்க இருந்து
இறந்த கவிஞர்களையும்
நீங்கள் தான்
உருவாக்க வேண்டும்
அவர்கள்
எழுத நினைத்தவற்றையும்
நீங்கள் தான்
எழுதவேண்டும்
அவர்கள்
தொடக்கிவைத்தவற்றையும்
நீங்கள்தான்
முடிக்கவேண்டும்
புறப்படுங்கள்
தூரங்களும்
இதயங்களும்
சுருங்கிப்போன உலகில்
உங்கள் கவிதைகள்
காவியங்களாய் ஊடுருவட்டும்
புயல்களை எதிர்பார்க்க
பூகம்பங்களை எதிர்கொள்ள
ஓவ்வொரு தமிழனுக்கும்
கற்றுக் கொடுங்கள்
அதோ
தொலைவில்..
“போர் இன்னும் ஓயவில்லை
எங்கள் தமிழ் ஈழமண்ணில்….”
ஒரு கவிஞன் உடைத்த
மௌனம் பேசுகிறது
“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்
நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…”
இன்னொரு கவிஞனின்
நம்பிக்கை பேசுகிறது.
எங்கே
நீங்களும்
உங்கள்
மௌனங்களை உடையுங்கள்
உடைக்கும் போது
மறக்கவேண்டாம்
நம்பிக்கையையும்
விடுதலை வேட்கையையும்
விதைப்பதற்கு
அன்பானவர்களே!
உங்கள் பேனாக்கள்
துளித்துளியாய்
கரையட்டும்
வார்த்தைகள்
தீப் பொறியாய் வீழட்டும்
அதுவே
தமிழர் மனங்களில்
உலகின் திசைகளில்
ஈழ விடுதலைப் பெருந்தீயை
அணையாது எரிக்கட்டும்.
|