காந்தள் மலர்ந்து கண் சிமிட்டும்.
வானோடும் முகிலிறங்கி
நாடெங்கும் நீர் தெளிக்கும்.
காற்றோடு குளிர்கலந்து
மேனி சில்லிட வைக்கும்.
தேசத்தின் தெருவெங்கும்
எழுச்சியும் புரட்சியுமாய்
எழில்எழுந்து கொலுவிருக்கும்.
அன்றைக்கு மலர்ந்த
மலர்களெல்லாம்
கல்லறைக்கென்றே மாலையாகும்.
கனவோடும் நினைவோடும்
ஊர்கூடித் தெருவேறும்.
கல்லறைத் திசை நோக்கி
கால் எடுத்துத்தான் நடக்கும்
வாச மலர்களோடு
பாச மலர்களெல்லாம்
கல்லறைக் கோவிலுக்குள்ளே
காலெடுத்து வைக்கும்.
அங்கே!
மாவீரத் தெய்வங்கள்
உள்ளும் புறமுமாய்
உணர்வில் வந்து நிறைவர்.
ஆன திசையெங்கும்
அவர்களே நடப்பர்.
காணும் பொருளிலெல்லாம்
முகம் காட்டுவர்.
எரியும் தீபத்தில் எழுந்து நிற்பர்.
மெல்லச் சிரிப்பர்.
எங்கள் மேனி தொடும் காற்றோடு
கலந்து வந்து
தங்கள் சாவீரச் செய்தி சொல்வர்.
உறவென்ற உணர்வெழுந்து
நெஞ்சுக்குள் நெருப்பெரிக்க
உயிரோடு உயிர்கலந்து
உறவெல்லாம் உருக,
உயிர் கரைய,
மெல்ல விழி கசிய,
கல்லறைக் கதவு திறந்து
வெளியே வந்தவர்கள்
எங்கள் விழி துடைப்பர்.
அவர் தினம் தினம் நினைந்திட்ட
தமிழீழம் உருவாக
உழைக்கும் படி உரைப்பர்.
விடியலுக்குப் பாதையிடும்
வலிமை பெறு!
விடுதலைக்கு உயிர்வரைக்கும்
விலைகள் கொடு!
தலைமுறைக்கு தலைநிமிர்வு
வாழ்வு கொடு!
தமிழன் என்றால் விழி உயரும்
பொருளை கொடு!...
என்றுரைக்கும் மறவரை
தொழுவோம்.
ஏற்ற பணி எந்நாளும்
தொடர்வோம்.
போர் விளைத்த சாம்பலிலே
புது விதைகள் முளைகொள்ளும்.
நாம் விதைத்த உயிர்களெல்லாம்
இனி எழுந்து களமாடும்.
ஊர் புகுந்த பகைவரெல்லாம்
தான் மாள அடி வீழும்
அலை எழுந்து களமாட
நாம் வாழ்ந்த ஊர் மீளும்.
எங்கிருந்தாலும்
சிறகுகள் விரிப்போம்!
எல்லைகள் தாண்டி
அங்குதான் பறப்போம்!
கல்லறை வீரரை
நெஞ்சினில் நினைப்போம்!
விளக்கேற்றும் நாளில்
உணர்வோடு கலப்போம்!